’வர்தா’ புயலால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், விடுமுறையை நீட்டித்து இருப்பதோடு, தேர்வுகள் குறித்து முறையான அறிவிப்புகள் வெளியிடாததால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
’வர்தா’ புயலின் கோரத் தாண்டவத்திற்கு, கடந்த 12ம் தேதியில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. புயல் சீற்றம் குறைந்ததாலும், போக்குவரத்து சீராக்கப்பட்டதாலும், பள்ளிகள் நேற்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல தனியார் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகள், மரங்கள் போன்றவை சரிந்ததால், அபாய நிலை தொடர்கிறது. உட்கட்டமைப்பு வசதிகள் குலைந்ததால், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள, பல தனியார் பள்ளிகள், நேற்று இயங்கவில்லை. பள்ளி நிர்வாகத்தின் சார்பில், பள்ளியின் வாசலில், அறிவிப்பு ஒட்டப்பட்டு இருந்தது.
காலையிலேயே, சாப்பாடு கட்டிக் கொண்டு, பள்ளி பாடப் புத்தகங்களைச் சுமந்து, நிறைய கனவுகளோடு வந்த மாணவர்கள், இந்த அறிவிப்பால், வெற்றுக் காகிதங்களாக திரும்பினர்.
தேர்வுகள் எப்போது?
’நடா’ புயல், ஜெயலலிதா மரணம், போன்றவற்றைத் தொடர்ந்து, வர்தா புயல் விடுமுறையால், மாணவர்களுக்கான பாடங்களை முடிப்பதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் பருவம்.
ஆனால், தேர்வுகள் குறித்து, தனியார் பள்ளிகள் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாததால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்த மாதத்தில், இதுவரை மூன்று நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடந்துள்ளன. தற்போது, புயல் பாதிப்பால், திங்கட்கிழமை வரை, தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலை தொடர்ந்தால், மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைவது உறுதி. -என்.குமரவேல், ஊரப்பாக்கம்.
No comments:
Post a Comment