உலகின் செல்வாக்கு மிக்க முதல் 10 தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். 2016-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 74 தலைவர்களின் பட்டியலை அமெரிக்காவின் "ஃபோர்ப்ஸ்' பத்திரிகை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், முதல் 10 இடங்களில் பிரதமர் மோடி, 9-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதொடர்பாக, அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
130 கோடி மக்கள்தொகைக் கொண்ட இந்தியாவில், நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். சமீப காலமாக, அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை அலுவல்பூர்வமாக சந்தித்து, ஒரு சர்வதேசத் தலைவராக மோடி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். மேலும், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்காக, சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொண்டு வரும் முக்கியத் தலைவராகவும் மோடி விளங்குகிறார்.
இது மட்டுமின்றி, கருப்புப் பணம், கள்ளப் பணம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக, இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்றும் கடந்த மாதம் அதிரடியாக அறிவித்தார். 740 கோடி மக்களைக் கொண்ட இந்தப் பூமிப் பந்தில், 74 தலைவர்கள் உலகை மாற்றியமைக்கும் வல்லமையுடன் திகழ்கிறார்கள் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியலில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக, உலகின் செல்வாக்கு மிக்க பெண் தலைவராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, சீன அதிபர் ஜீ ஜின்பிங் (4-ஆவது இடம்), போப் பிரான்சிஸ் (5-ஆவது இடம்), "மைக்ரோசாஃப்ட்' இணை நிறுவனர் பில்கேட்ஸ் (7-ஆவது), "ஃபேஸ்புக்' தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பக் (10-ஆவது இடம்), பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் (23-ஆவது இடம்), ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் (32-ஆவது இடம்), வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் (43) ஆகிய இடங்களைப் பிடித்துள்ளனர்.
"ஜியோ' 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி, தகவல் தொடர்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, 38-ஆவது இடத்தையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, 48-ஆவது இடத்தையும், "மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, 51-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
No comments:
Post a Comment