மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பொதுத்தேர்வு விடைத்தாள்கள், 'டிஜிட்டல்' முறையில் திருத்தப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள், ஆங்காங்கே விடை திருத்தும் மையங்கள் அமைத்து, ஆசிரியர்கள் மூலம் திருத்தப்படுகின்றன. இதில், அவ்வப்போது பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
தாமதம் : இது போல, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட தேர்வுகளிலும், மையங்களில் தான் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. விடைத்தாள் அனுப்புதல், பிரித்தல், மறு ஆய்வு செய்தல் போன்றவற்றிற்கு, கூடுதல் நாட்கள் தேவைப்படுவதால், தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் அனுப்புதல் மற்றும் திருத்தம் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., வாரிய தலைவர், ஆர்.கே.சதுர்வேதி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரும் கல்வி ஆண்டில், தேர்வு மையத்திலிருந்து விடைத்தாள்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆன்லைனில் விடை திருத்த ஒருங்கிணைந்த மையத்திற்கு அனுப்பப்படும். கணினி குறியீடு : பின், அவற்றில் கணினி குறியீடு கொண்ட, ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள், கணினி மூலமும், மற்றவை கணினி வழியே பிரித்தும், திருத்த அனுப்பப்படும். இந்த, டிஜிட்டல் திருத்த முறையால், முறைகேடாக திருத்தும் வகையில், விடைத்தாள்கள், 'லீக்' ஆவது; காணாமல் போவது தடுக்கப்படும். மேலும், 25 நாட்களுக்கு முன், தேர்வு முடிவுகளை வெளியிடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment