Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 7, 2016

    எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஜெயலலிதாவைப் பிடித்திருப்பது ஏன்?

    நடு வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும். 


    அப்போலோவில் இருந்து போயஸ்கார்டனுக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், ‛முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பூத உடல்...’ என செய்தி சேனல்கள் உச்சரித்த நொடியிலேயே, அதிமுக அல்லாதவர்களின் கண்களிலும் கண்ணீர். அப்போது டிவிகளில் ஒளிபரப்பான ஜெயலலிதாவின் சிரித்த முகம் ரொம்பவே  வாட்டியது. இதைப் பார்க்க முடியாது வெளிய வந்த பக்கத்து வீட்டுக்காரர்,  'இத்தனைக்கும் ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்காது. செத்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் ஏனோ கலங்குது' என்றார்

    அவரைப் போலவே, ‛ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்...’ என  பலரும் கலங்கினர். ‛பள்ளியைமுடித்து வெளியே வந்ததும்தான் கண்டிப்பான ஆசிரியர்கள் மீதான மரியாதை துளிர்விடத் துவங்குகிறது’ என நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். யோசித்துப் பார்த்தால், ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே ரொம்பவும் ஆதங்கப்படுகின்றனர்.  உண்மை அது.  ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர்கள்தான் இன்று கலங்கி நிற்பது விநோத முரண். 

    ராஜாஜி - பெரியார் இருவரும் கொள்கை ரீதியாக கடைசி வரை முட்டிக் கொண்டவர்கள். ஆனால் ராஜாஜி இறந்தபோது பெரியார் கலங்கி அழுதார். இன்று ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடம் கருணாநிதிக்கே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். குறைந்தபட்சம், தனக்கு நிகரான ஒரே எதிரியும் இனி இல்லை என்றாவது நினைத்திருப்பார்.  எதிரியை பட்டவர்த்தனமாக வெற்றியாளன் என அறிவிக்க, மரணம் தேவைப்படுகிறது. 

    ஜெயகாந்தனை ஒருவன் ஆழ்ந்து படித்திருக்கவே மாட்டான். ஏன் அவரைப் பிடிக்கும் என கேட்டால் ‛அவர் சிங்கம் மாதிரி, அந்த ஆளுமை, அந்த திமிர், மீசையை முறுக்கி விடுறது’ என அடுக்குவான். அதேபோலத்தான் இன்று. ஜெயலலிதா இறந்ததும் எல்லோரும் இப்போது அந்த ஆக்ருதியைத்தான் பேசுகிறோம். நேற்று வரை திமிர் என்று சொன்னவன் இன்று மிடுக்கு என்கிறான்.  அகம்பாவம் என்றவன் இன்று போர்க்குணம் என்கிறான். அவரது ஆணவம் கம்பீரமாகப் பார்க்கப்படுகிறது. ‛இரும்பு மனுஷி’ என பெருமையாக சொல்கிறார்கள். இத்தனை நாள் ”இவ்வளவு திமிரா” என கோவப்பட்டவர்கள் எல்லாம், இனிமேல் இப்படியொரு பெண்ணை பார்க்க முடியுமா என ஏங்குகிறார்கள். 

    சில சமயங்களில் நிசப்தம் பயங்கரமானது. ஓயாது அடம் பிடிக்கும் குழந்தை, கொஞ்ச நேரம் அமைதியாக தூங்கினால், எதாவது சேட்டை பண்ண மாட்டானா என மனம் ஏங்கும் இல்லையா?  ஜெயலலிதாவை இத்தனை நாள் எதிர்த்தவர்கள் இன்று அந்த மனநிலையில்தான் இருக்கின்றனர்.  ‛ஜெயலலிதா முதல்வரா இருந்ததால் எனக்கு எந்த பலனுமே இல்லை. ஆனா, அவங்க இல்லைன்னதும் தமிழ்நாடு அநாதை மாதிரி ஆயிடுச்சேன்ற நினைப்பு வந்திருச்சு. தார்மீக பலம் இல்லாத பயம் வந்திருச்சு’ என்பதே அரசியல் வாடையே இல்லாதவரின் கருத்து. கிட்டத்தட்ட, 75 நாட்கள் மனதை தயார்படுத்தியே,  இப்படியொரு சூழல் எனில், பட்டென செப்டம்பர் 23-ம் தேதியே இறந்து விட்டதாக அறிவித்திருந்தால், என்ன ஆயிருக்கும்? 

    ‛ஆணவக்காரி’  என திட்டிய பெண்கள் கூட, இன்று இமயம் சரிந்து விட்டதாகவே உணர்கின்றனர்.  , ‛அவங்க என்னுடைய ரோல் மாடல்டா. அவங்க. உங்களை எல்லாம் காலில் போட்டிருந்தாடா’ என உள்ளூர பெருமை கொண்டிருந்த பெண்கள், இந்த மரணத்தை பெண்மையின் மரணமாகப் பார்க்கின்றனர். 

    பிரிவினால்தானே பிரியத்தின் மொழியைப் பேச முடியும். இவ்வளவு பேருக்கு ஜெயலலிதாவைப் பிடிக்கும் என்பதே ஆச்சரியம்தான். ரத்த சொந்தம் யாரும் இல்லாததும், இந்த பரிதாப காட்சிகளும் காரணமாக இருக்கலாம். சொந்தமே இல்லாமல் இப்போது தனியாக இருப்பதைப் பார்த்தால் அவ்வளவு திமிர்  இல்லாவிடில், பொதுவாழ்க்கையை எப்படி சமாளித்திருக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது.

    ‛ஜெயலலிதாவைச்  சுற்றி நிற்கும் யார் முகத்திலும் துக்கம் இல்லை.  கோரம்தான் இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் இந்த அம்மா எப்படி சாந்தமாக இருந்திருக்க முடியும்? அப்ப இந்த அம்மா இத்தனை நாள் இந்த வலி எல்லாம் பொறுத்திட்டுதான் இருந்திருக்கு’ என்பது ஒரு ர.ர.வின் கேள்வி.

    எது எப்படியோ,  அவர்  மரணம் புனிதத்தன்மையை ஏற்படுத்தி விட்டுச் சென்று விட்டது. தன் மீதான விமர்சனத்துக்கு முற்றப்புள்ளி வைக்க ஜெயலலிதாவுக்கு மரணம் தேவைப்பட்டிருக்கிறது. என்ன செய்தால் என்னை விமர்சிப்பதை நிறுத்துவீர்கள் என்ற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருந்திருக்கும் அல்லவா? மரணம்தான் அதன் பதில். அது அவருக்கு கடைசி வரைக்கும் தெரியவே இல்லை.

    சமூக வலைதளத்தில் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார். “ எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் அவரைப் பிடித்தேதான் இருந்தது.! ”

    No comments: