உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை செயல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 ஆக பணியாற்றி வருபவர் செந்தில். இவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
உடற்கல்வியில் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் உடற்கல்வி ஆசிரியர்களாக பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். உடற்கல்வியில் பட்டப்படிப்பு படித்தவர்கள் உடற்கல்வி இயக்குநர் கிரேடு 2 ஆகவும், உடற்கல்வியில் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 ஆகவும் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். உடற்கல்வியில் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்து விட்டு பணியில் இருப்பவர்களும் பதவி உயர்வு மூலம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக நியமிக்கப்படுகின்றனர். தற்போது மாவட்டம் தோறும் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களே மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணியில் உள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் தான் கண்காணிக்கின்றனர்.
அப்படி இருக்கும் போது மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக பணியில் நியமிக்கப்படுபவர்கள் உடற்கல்வியில் பட்ட மேற்படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக நியமிக்கப்படுவதால் குறைந்த கல்வித் தகுதியை உடையவர்கள், அதிக கல்வித் தகுதியை உடையவர்களை கண்காணிக்கும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அரசுக்கு பலமுறை மனு கொடுத்தோம். இந்த குறைபாட்டை சரிசெய்யும் வகையில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாகும் போது, உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 ஆக பணியாற்றுபவர்களை பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனவே, இந்த அரசாணையை செயல்படுத்தி உடற்கல்வி கிரேடு 1 பணியில் இருப்பவர்களைக் கொண்டு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2016 மார்ச் மாதம் பள்ளிக்கல்வித்துறை செயலர், இயக்குநர் ஆகியோருக்கு மனு கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை இல்லை. எனவே, இந்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கொடுத்த மனுவை தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை செயலர் பரிசீலித்து 8 வாரத்துக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment