எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, இரண்டாம் கட்ட, 'நீட்' மருத்துவ பொது நுழைவு தேர்வில், தாமதமாக வந்தோர் அனுமதிக்கப்படவில்லை; அதனால் பலர், 'கேட்' ஏறி குறிக்க முற்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இரண்டாம் கட்ட, 'நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது; 4.7 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில், 3,000 மாணவர்கள் எழுதினர். இயற்பியல், வேதியியல் ம ற்றும் உயிரியல் பாடங்களில், 180 ஒரு மதிப்பெண் கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் கேட்கப்பட்டன.
உயிரியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக, மாணவ, மாணவியர் தெரிவித்தனர். மாணவர்களுடன் வந்த பெற்றோர், தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்கள் அனுமதிக்கப் படவில்லை. தேர்வு மைய வளாக கதவுகள் மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சில மாணவர்கள், 'கேட்' ஏறி குதிக்க முயன்றனர். மாணவர்களுக்கு தேர்வு அறையிலேயே கறுப்பு நிற பால்பாய்ன்ட் பேனா வழங்கப்பட்டது. வாட்ச், ஷூ, சாக்ஸ், மூக்குத்தி, காது வளையம், கழுத்து செயின், தலைமுடி கிளிப் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிய தடை விதிக்கப்பட்டது. அவற்றை கழற்றி, பெற்றோர் பாதுகாப்பாக வைத்துக் கொண்டனர்.
தேர்வு மையங்களுக்குள், 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு தேர்வறையிலும், இரண்டு கண்காணிப்பாளர்கள், தேர்வை கண்காணித்தனர். நீட் இரண்டாம் கட்ட தேர்வுகளின் விடைத்தாள் நகல், ஆக., 4 முதல் 6 வரையிலும், விடை குறிப்புகள், ஆக., 7 முதல் 9 வரையிலும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியாகும். தேர்வு முடிவுகள், ஆக., 17ல் வெளியாகும்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், மத்திய அரசின், 15 சதவீத இடங்கள் மற்றும், 14 மாநிலங்களில் உள்ள கல்லுாரிகளில், மத்திய, மாநில ஒதுக்கீட்டு இடங்கள் என, 40 ஆயிரம் இடங்கள், இந்த மதிப்பெண்படி நிரப்பப்படும். தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், 15 சதவீத மத்திய அரசு இடங்களும், தனியார் மருத்துவ கல்லுாரி மற்றும் பல்கலைகளில், நீட் தேர்வு முடிவின்படியே அனைத்து இடங்களும் நிரப்பப்படும்.
No comments:
Post a Comment