மாணவர்களின் திறமையை உயர்த்துதல் தொடர்பாக ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆர்.கே.பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 40 பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 40 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 2016 - 17 ஆண்டுக்கான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாணவர்களிடம் உள்ள திறமைகளை எவ்வாறு உயர்த்துவது என்பது தொடர்பான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.தயாளன் பங்கேற்று மாணவர்களின் கற்றலில் ஏற்படும் இடர்ப்பாடுகள் குறித்தும், அவற்றைக் களைவதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து பள்ளிகளில் படைப்பாற்றல், கற்றல் முறை, செயல்வழிக் கற்றல் முறை வழியாக மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தல் ஆகியவை குறித்தும், மாதாந்திர மதிப்பீட்டுத் தேர்வு மூலம் இதர நிலைகளில் உள்ள மாணவர்களை இனங்கண்டு, அவர்களின் தர நிலையை உயர்த்தும் விதமாக பள்ளி அளவில் செயல் திட்டங்கள் தீட்டியும் மாணவர்களின் கற்றல் திறனை மேன்மையடையச் செய்தல் ஆகியவற்றை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் அரங்கன், வெங்கடேஸ்வரலு, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் டார்வின், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment