நிகழ் கல்வியாண்டில் பதவி உயர்வில் செல்லவுள்ள ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது என கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் (ந.க.எண்: 011042) கூறியிருப்பதாவது:
2016-17 ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை சிறப்பாக நடத்திட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
மனமொத்த மாறுதல்: 2016-17 ஆம் கல்வியாண்டில் ஓய்வுபெறவுள்ளவர்கள் மற்றும் பதவி உயர்வில் செல்ல உள்ள ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் கோரக்கூடாது. மனமொத்த மாறுதல் அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கெனவே பணிபுரிந்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்கக் கூடாது. மனமொத்த மாறுதல் கோரும் இரண்டு ஆசிரியர்களும் 1-6-2015க்கு முன்னர் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment