தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் நடந்தது. மாநிலத் துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ், சிங்கராயர்;,
மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாவட்டத் துணைச் செயலாளர் ரவி;, வட்டாரச் செயலாளர்கள் ஜெயக்குமார், சகாயதைனேஸ், சேவியர் சத்தியநாதன், சத்தியேந்திரன், மற்றும் அஜ்மீர், ஜோசப், சாஸ்தா சுந்தரம், பாலமுருகன், சூசை மாணிக்கம், ரவிக்குமார், டேவிட் ரொசாரியோ, முத்துக்குமார் உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அரசு 7வது ஊதியக்குழுவிற்கு குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ள நிலையில் அதற்கு முன்னதாக இடைநிலை ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக்குழுவில் இழைக்கப்பட்ட ஊதிய குறைபாடுகளை முற்றிலுமாக களையப்பட
வேண்டும் என இச்செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதரக் கொள்கைகள் ஆகியவற்றை எதிர்த்து 2016 செப்டம்பர்-2 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மக்கள் நலன், தேச நலன் கருதி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்க முடிவெடுத்துள்ள நிலையில் அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டக்கிளை அவ்வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றிட இம்மாவட்டச் செயற்குழு முடிவாற்றுகிறது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க நாளான ஆகஸ்ட்-2 மற்றும் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவன நாளான ஆகஸ்ட்-12 ஆகியவற்றை தரமான கல்வி நாளாக இயக்க கொடியேற்றி அனைத்து வட்டாரங்களிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 6ல் தொடங்க இருக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நேர்மையாகவும், வெளிப்படையாகவும், எவ்வித புகாருக்கும் இடம் கொடாமல் நடத்த சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில்; ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகைக்கு உரிய கணக்கு சீட்டினை ஆசிரியர்களுக்கு வழங்க உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டுமென மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
சென்னை லயலோ கல்லூரியில் இயக்கத்தின் சார்பாக வருகிற 30ந் தேதி நடத்தப்படும் புதியக் கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து வட்டாரச் செயலாளர்களும் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
2016-2017 புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கல்விப் பணியை கெடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத 'குடிநீர் பரிசோதனைப் பயிற்சி' ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும், அந்த ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கும் வகையில் மூன்று நாட்கள் ஊராட்சி அலுவலகத்தில் அமர்ந்து குடிநீர் பரிசோதனையில் ஈடுபட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையும் திரும்ப பெற வேண்டும் என இச்செயற்குழு சிவகங்கை மாவட்ட ஆட்சியரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment