வேலூர் மாவட்டம், அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சக மாணவரின் பிறந்தநாளை பள்ளி வளாகத்திலேயே 12 மாணவர்கள் மது அருந்தி கொண்டாடி, வகுப்பறைக்கு போதையில் வந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரக்கோணத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியானது ஓச்சேரி சாலையில் உள்ளது. இப்பள்ளியில் மொத்தமாக மேல்நிலை வகுப்புகளைச் சேர்த்து 342 மாணவர்கள் படிக்கின்றனர். மேல்நிலை வகுப்புகளில் மட்டும் 168 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 28 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் பள்ளி தொடங்கிய நிலையில், மேல்நிலை முதல் குரூப் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பின் வரிசையிலும், நடுவரிசையிலும் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பிக் கொண்டே இருந்ததாகத் தெரிகிறது. அவர்கள் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஆசிரியை, அதுகுறித்து காரணம் அறிய அருகில் சென்றுள்ளார். அப்போது அவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர், தலைமை ஆசிரியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்களில் 12 பேர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 12 பேரையும் வகுப்பில் இருந்து வெளியேற்றிய தலைமை ஆசிரியர், காலையில் நல்ல முறையில் இருந்த மாணவர்கள், மதியம் மது அருந்தியிருந்தது எப்படி என விசாரித்துள்ளார்.
இதில், அந்த மாணவர்களில் ஒருவருக்கு அன்று பிறந்த நாள் என்பதும், இதையடுத்து அந்த குறிப்பிட்ட மாணவர், பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள கட்டடத்துக்கு உடன் பயிலும் 11 மாணவர்களை அழைத்துச் சென்று மது விருந்து வைத்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த மாணவர்களுக்கு அறிவுரை கூறிய ஆசிரியர்கள், அவர்களை திங்கள்கிழமை பெற்றோருடன் பள்ளிக்கு வரச் சொல்லியுள்ளனர்.
ஆனால் திங்கள்கிழமை அவர்களில் 6 மாணவர்கள் மட்டுமே பெற்றோருடன் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பெற்றோரை எச்சரித்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுரை கூறி மீண்டும் வகுப்புக்கு செல்ல அனுமதித்தனர். மற்ற ஆறு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வரை பெற்றோரை அழைத்து வரவில்லை. இதையடுத்து அந்த ஆறு மாணவர்களுடைய பெற்றோரின் தொலைபேசி எண்களில் ஆசிரியர்கள் தொடர்பு கொண்டும் முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த மாணவர்களில் 4 பேர் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவோர் என்பதும், மற்ற ஐந்து பேர் சாதாரண மதிப்பெண் பெறுவோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள பாழடைந்த கட்டடத்தில் தான் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. காலை நேரத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று அங்கு இருப்பவற்றைப் பார்த்து இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பழுதடைந்த கட்டடங்களை புதுப்பித்தும், பாழடைந்த கட்டடங்களை இடித்து அகற்றியும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளை எடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளித்தால் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் நல்வழிப்படுத்த இயலும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment