கல்வியால் மனிதத்தைப் பரப்ப வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார். ஸ்ரீ வல்லபாசார்யா வித்யா சபாவின் 50-ஆவது ஆண்டு விழா சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டுவிழா அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது:
1963-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீ வல்லபாசார்யா வித்யா சபா கல்விக்காகப் பாடுபட்டு வருகிறது. சபா உறுப்பினர்கள் தங்களது நேரத்தையும் பணத்தையும் ஒதுக்கி கல்வியின் மூலமாக மனிதத்தைப் பரப்பி வருகின்றனர்.
கல்வியால் மட்டுமே மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். நாடு முன்னேற்றமடையும்.
கல்வி என்பது தனியே ஒருவனை அறிவூட்டுவது மட்டும் நின்றுவிடாது, சமூக ஆன்மிகம் தொடர்பான விழுமியங்களை வளர்க்கவும் கல்வி உதவ வேண்டும் என்றார்.
விழாவில், வல்லபாசார்யா வித்யா சபா நிறுவனர் ஸ்ரீ மதுரேஸ்வர்ஜி மஹராஜ் பேசியது: வல்லபாசார்யாரின் கருணையாலும், ஆசீர்வாதத்தாலும் மிகப் பெரிய கல்வி நிறுவனமாக அமைப்பு வளர்ந்துள்ளது. குறைந்தளவு காலத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.
நிகழ்வில் ஸ்ரீ வல்லபாசார்யா வித்யா சபாவின் புரவலர் ஸ்ரீ த்ருமில் குமார்ஜி பேசியது: கல்வியால் ஆன்மிகம் காப்பாற்றப்பட வேண்டும். ஆன்மிகத்தால் கல்வி காப்பாற்றப்பட வேண்டும். மதங்கள் சொல்ல வந்த கருத்துகளை சரியாகப் புரிந்து கொண்டால் என்றுமே பிரச்னை வராது. உலகத்தில் மிகச் சிறந்த உயிரினம் மனிதன்தான் என்பதை உணர என்றார்.
நிகழ்வில் ஆங்கிலத்தில் பரத் பரிக் எழுதிய ஸ்ரீ வல்லபாசார்யாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை மதுரேஸ்வர்ஜி மஹராஜ் ஸ்ரீ வெளியிட்டார். இதன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியிடப்பட்டன.
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவன நிர்வாக இயக்குநரும், ஸ்ரீ வல்லபாசார்யா வித்யா சபாவின் செயலருமான மனோஜ் குமார் சொந்தாலியா நன்றியுரை நிகழ்த்தினார். 1963-இல் தொடங்கப்பட்ட ஸ்ரீ வல்லபாசார்யா வித்யா சபா அமைப்பின் மூலம் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, 3 பள்ளிகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 14,500-க்கும் மேற்பட்டோர் கல்வி கற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment