திருமங்கலம் மதுரை காமராஜ் பல்கலை உறுப்பு கல்லுாரியில் இடநெருக்கடி மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். திருமங்கலம் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் 2012 முதல் செயல்படும் கல்லுாரியில் பி.காம்., பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி., கணிதம் பாடப் பிரிவுகளில் 600 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இங்கு மொத்தம் 12 வகுப்பறைகள் உள்ளன. இவற்றில் தான் 600 பேரும் அமர்ந்து நெருக்கடியில் கல்வி பயில்கின்றனர். ஆசிரியர்களுக்கு &'ஸ்டாப் ரூம்&' வசதி இல்லை. இரு துறை ஆசிரியர்களுக்கு ஒரே ஸ்டாப் ரூம் ஒதுக்கப்பட்டுள்ளது. 300 மாணவியர் படிக்கும் இந்த வளாகத்தில் தனிக் கழிப்பறை வசதி இல்லை. பள்ளி வளாக கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். அதிலும் தண்ணீர் வராததால் அவர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது.
பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
மாணவர் சேர்க்கையில் மட்டும் குறியாக பல்கலை உள்ளது. கட்டணம் செலுத்தி படிக்கும் அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. நுாலக வசதி கூட இல்லை. கழிப்பறை வசதி இன்றி மாணவியர் பரிதவிக்கின்றனர். பல முறை பல்கலைக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
ஆசிரியர்களுக்கு ஜூன் சம்பளம் இதுவரை கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர். பி.காம்., பி.ஏ., ஆங்கிலம், தமிழில் மேலும் ஒரு வகுப்பு துவங்க மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இட நெருக்கடிக்கு தீர்வு காணாமல் மேலும் மாணவர்களை சேர்ப்பதால் பிரச்னை ஏற்படும், என்றார்.
No comments:
Post a Comment