பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50 சதம் வழங்க உத்தரவிட கோரி நீதிமன்றத்தை அணுகுவது என ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கணபதி, தலைமையிடச் செயலர் சின்னராசு உள்ளிட்டோர் பேசினர்.
பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50 சதம் வழங்க நீதிமன்றத்தை நாடுவது, ஆசிரியர்களின் தேர்வுநிலை ஆணையை ஒரே நேரத்தில் நடத்த முதன்மைக் கல்வி அலுவலரைச் சந்தித்து முறையிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பொதுத் தேர்வில் சிறப்பிடம்:மாணவர்களுக்குப் பாராட்டு
பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் வகித்த மாணவர்களுக்கு பிராமணர் சங்கம் சார்பில் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட பிராமணர் சங்கம் சார்பில் பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சாய்ராம் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் சீனிவாசன், பொருளாளர் திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற அரசு கலைக் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், சமூக ஆர்வலர் குருராவ் ஆகியோர் பேசினர்.
மாநில பொதுச் செயலர் ஜெகநாதன், கொள்கை பரப்புச் செயலர் நரசிம்மன் ஆகியோர் மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த 25 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சிறப்பு உபகரணங்கள் அளிப்பு
கிருஷ்ணகிரியில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சிறப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி:
கிருஷ்ணகிரி வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத்
திறன் குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. 23 சக்கர நாற்காலிகள், 58 காதொலிக் கருவிகள், 25 ரேலேட்டர் போன்ற உபகரணங்களை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் ஸ்ரீராமுலு, மேற்பார்வையாளர் வெங்கடாசலம், ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment