மத்திய அரசு சார்பில், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவியர் இலவசமாக சேரும், உதான் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில் ஏழை மாணவ, மாணவியரும் சேர்ந்து இலவச கல்வி கற்கும் திட்டத்தை, உதான் திட்டம் என்ற பெயரில், 2014ல் மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இந்த திட்டத்தில், 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், அவர்களது தந்தையின் ஆண்டு வருமானம், ஆறு லட்சத்துக்கு குறைவாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு பிளஸ் 1 முதல் இலவச பயிற்சி தரப்படுகிறது. நாடு முழுவதும் விண்ணப்பங்கள் பெற்று, அதில் தேர்வு செய்யப்படும் மாணவியருக்கு அவரவர் ஊர்களில், மத்திய அரசின் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
பின், பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று, நுழைவுத்தேர்வில் தேர்வாகும், 1,000 மாணவியருக்கு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,யில், பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜினியரிங் படிப்புகளை இலவசமாக படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 படிக்கும் மாணவியர் இந்த திட்டத்தில் சேரலாம். அவர்களுக்கு, ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி தரப்படும்.
இத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவியர், 10ம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம், 70 சதவீத மதிப்பெண்ணுடன் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில், 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 1 பாடப்பிரிவில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில் சேர்ந்திருக்க வேண்டும்.
நடப்பு ஆண்டில், இந்த திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, ஜூலை, 4ல் துவங்கி, 13ம் தேதி முடிவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, 20ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர், http://cbseacademic.in/ என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம்.
No comments:
Post a Comment