தேசிய கல்விக் கொள்கையைத் தயாரிக்க கல்வியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தேசியக் கல்விக் கொள்கை 2016-யை தயாரித்து வெளியிடும் முயற்சியில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 217 பக்க அறிக்கையை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கை முழுமையாக இன்னும் வெளியிடப்படவில்லை. மாறாக, அதன் சில உள்ளீடுகள் அடங்கிய 43 பக்க அறிக்கை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அரசுக்கு சில பரிந்துரைகளைத் தமிழக மக்களின் சார்பில் தெரிவிப்பதற்கான அவசியம் ஏற்படுகிறது.
இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கவனத்தில் கொண்டு கல்விக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும். கல்விக் கொள்கை வரைவைத் தயாரிக்க கல்வியாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
கல்வியில் சமயச் சார்பையும், பழமைப் பற்றையும், சந்தைப் பொருளாதார அணுகுமுறையையும் மத்திய அரசு புகுத்துமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், மாநில அரசுப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரைக் கொண்ட உயர் நிலைக் குழுவைக் அமைக்க வேண்டும். அந்தக் குழுவின் கருத்துக்கேற்ப தேசியக் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment