கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில் 2,000-க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரலில் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து 3,378 பேர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறுகூட்டலுக்கு 2,707 பேர் விண்ணப்பித்தனர். இந்த மறுமதிப்பீட்டில் 2,220-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் மாற்றம் இருந்தது. அதைத் தொடர்ந்து தேர்வுத் துறை சார்பில் தொடர்புடைய ஆசிரியர்களை அழைத்து விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முதுநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
வழக்கமாக பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டின்போது சிலருக்கு மட்டும் மதிப்பெண்களில் மாற்றங்கள் இருக்கும். இந்த முறை ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. இதில் 5 முதல் 10 மதிப்பெண் அதிகமாக வந்துள்ளது. சில மாணவர்களுக்குப் பக்கங்கள் மதிப்பீடு செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டலில் 56 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது. குறிப்பாக சில மாணவர்களுக்கு 80 மதிப்பெண்கள் வரை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில்தான் மதிப்பெண்கள் அதிகம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று ஆசிரியர்கள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ததில் பல குளறுபடிகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் தேர்வுத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணையில் திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் திருத்தப்பட்ட மறுகூட்டல் விடைத்தாள்களில் மதிப்பெண் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "தற்போது சம்பந்தப்பட்டஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். அதில் தவறு கண்டறியப்பட்டால், அவர்களின் ஆண்டு ஊதிய உயர்வு குறைக்கப்படும்' என்றனர்.
No comments:
Post a Comment