'சார்ட்டட் அக்கவுன்டன்ட்'டுக்கான சி.ஏ., தேர்வில், 613 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில், சேலம் மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். சி.ஏ., தேர்வு, ஆண்டுக்கு இரு முறை, நவம்பர் மற்றும் மே மாதங்களில் நடக்கிறது. சி.பி.டி., எனப்படும், பொது தகுதித்தேர்வு, மெயின் தேர்வு மற்றும் இறுதித் தேர்வு என, மூன்று கட்டமாக தேர்ச்சி பெற வேண்டும். இதில், மே மாதம் நடந்த, மூன்றாம்கட்ட இறுதித் தேர்வின் முடிவுகளை, 'இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட்' சங்கம், நேற்று அறிவித்தது.
76 சதவீதம் : மாநில அளவில் தேர்ச்சி பெறவே கடினமாக கருதப்படும் இந்த தேர்வில், சேலத்தை சேர்ந்த எஸ்.ஸ்ரீராம் என்ற மாணவர், நாட்டிலேயே முதலிடத்தை பெற்றுள்ளார். இரண்டு பாடப்பிரிவுக்கான தேர்வுகளில், 40 ஆயிரத்து, 180 பேர் பங்கேற்றனர்; 4,565 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற ஸ்ரீராம், மொத்தம், 800 மதிப்பெண்களுக்கு, 613 மதிப்பெண் பெற்றார்; இது, 76.63 சதவீதம். ஸ்ரீராம், சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஸ்ரீனிவாசன், சேலத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாய் பத்மா, பெரம்பலுார் மாவட்ட நுாலக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
பயிற்சி : முதலிடம் பெற்றது குறித்து, ஸ்ரீராம் கூறியதாவது: அம்மாபேட்டை, வித்யாமந்திர் பள்ளியில், 2012ல், பிளஸ் 2 முடித்தேன். அப்போதே, ஜூனில் நடந்த சி.பி.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2013ல் நடந்த மெயின் தேர்வில், 700 மதிப்பெண்களுக்கு, 551 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில், ஏழாம் இடம் பெற்றேன். அதேபோல், 2014ம் ஆண்டில், 'கம்பெனி செக்ரட்டரி' தேர்வில் பங்கேற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்றேன். பின், பயிற்சி காலத்தில், 'ஜே.வி.அண்டு கோ' நிறுவனத்தில் ஆடிட்டர் சி.என்., நரேந்திரனிடம் பயிற்சி பெற்று வருகிறேன். சி.ஏ., இறுதித் தேர்வுக்காக சேலத்தில், இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட் நிறுவனமான, ஐ.சி.ஏ.ஐ., வகுப்பில் பயிற்சி எடுத்தேன். கடைசி நான்கு மாதங்கள், சென்னையில் உள்ள, 'பிரைம் அகாடமி'யில் பயிற்சி பெற்றேன்.
தினமும்... : இரண்டரை ஆண்டுகளாக, தினமும் இந்த தேர்வுக்கு தயாரானதால் இந்த வெற்றியை பெற முடிந்தது. சி.ஏ., படிக்கும் ஒவ்வொருவரும் தேர்வு வரும் போது படிக்கலாம் என்பதை விட, அதற்கான நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி சேர்வது முதல் இறுதி தேர்வு வரை, தினமும் படித்து தயாரானால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த தேர்வில், தேசிய அளவிலான இரண்டாம் இடத்தை, விஜயவாடாவைச் சேர்ந்த கந்தெட்டி நாகா என்ற மாணவர், 610 மதிப்பெண் பெற்றும்; மூன்றாம் இடத்தை, குஜராத் மாநிலம், ஜாம்நகர் யஷ் மனோஜ்குமார், 599 மதிப்பெண் பெற்றும் பிடித்துள்ளனர்.
No comments:
Post a Comment