புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, 5 மாதங்களில் யாரையும் சந்திக்கவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்தது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் 2003 ஏப்.,1ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த புதிய பென்ஷன் திட்ட சந்தா,அரசு பங்கு தொகை என, மொத்தம் ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இதையடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் செய்தனர். சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய பென்ஷன் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. இந்த குழு அறிக்கைப்படி பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என, அரசு அறிவித்தது. வல்லுனர் குழு செயல்பாடு குறித்து திண்டுக்கல் மாவட்டம் எரியோடு ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் சில விபரங்களை பெற்றுள்ளார்.
அதன்படி வல்லுனர் குழு மார்ச் 28 ல் ஒருமுறை மட்டும் கூடியுள்ளது. அதிலும் உறுப்பினர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் பங்கேற்கவில்லை. மேலும் 5 மாதங்களில் இதுவரை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியை கூட சந்திக்கவில்லை. மேலும் அந்த குழுவிற்கு தகவல் தெரிவிக்க 'இமெயில்' கூட இல்லாதது தெரியவந்துள்ளது.
பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: 2016 ஜூன் 22 வரை புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு 1,433 பேர் விண்ணப்பித்தனர். இதில் 245 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இதனால் வல்லுனர் குழுவின் முடிவை எதிர்பார்த்து அரசு ஊழியர், ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் வல்லுனர் குழு முறையாக செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது, என்றார்.
No comments:
Post a Comment