பொதுத்தேர்வு குறித்த ஆலோசனை கூட்டத்தில், பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க, மின்சார வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, முதன்மை கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பள்ளி கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) பழனிசாமி தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 23 ஆயிரத்து 917 மாணவர், மாணவியர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
அத்துடன், 837 தனித்தேர்வர்கள், 26 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதுகின்றனர். 51 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வு மையங்களுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என, மின்சார வாரியத்திடம் கேட்டுள்ளோம்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், தேர்வு மையத்திற்கும் இடையூறு ஏற்படாத வண்ணம், உரிய பாதுகாப்பு வழங்க, மாவட்ட எஸ்.பி.,யிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் சரியான நேரத்தில் தேர்வு எழுத வருகை தரும் வகையில், சரியான நேரத்தில் பஸ்களை இயக்க, போக்குவரத்துத்துறையிடம் பேசியுள்ளோம். தேர்வு பணி சிறப்பாக நடக்க, 51 முதன்மை கண்காணிப்பாளர்கள், 21 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 51 துறை அலுவலர்கள், 44 கூடுதல் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுத்தேர்வில் எந்த தவறுகளும் நடக்காமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் அகமதுபாஷா, ராஜா, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment