குழந்தை பிறக்கும் முன், பள்ளியில் அட்மிஷன் பெறும் நிலை உள்ளது, என, நடிகர் பிரசன்னா பேசினார். திருச்சி அகரா பன்னாட்டுப் பள்ளியில், சர்வதேச மழழையர் பாடத்திட்ட அறிமுக விழா, நேற்று மாலை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக, நட்சத்திர தம்பதி, நடிகர் பிரசன்னா - நடிகை சினேகா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், நடிகர் பிரசன்னா பேசியதாவது: தற்போது, குழந்தை பிறக்கும் முன்னரே, பள்ளியில் அட்மிஷனுக்கு முன்பதிவு செய்யும் நிலை உள்ளது. பெற்றோர் என்ற முறையில், எங்கள் குழந்தைக்கு, எவ்வகை கல்வி அளிப்பது என்ற கவலை ஏற்பட்டுள்ளது. கல்வி என்பது பணம் சம்பாதிக்கத்தான் என்ற குறிக்கோளுடன் பலர் செயல்படுகின்றனர். சிலர் மட்டுமே கல்வியை உண்மையான குறிக்கோளுடன் எடுத்துச் செல்கின்றனர்.
இந்த காலத்தில் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால், குழப்பமும், பயமும் வருகிறது. நான் சிறந்த முறையில் உருவாக, நான் படித்த பள்ளியும், எனக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுமே காரணம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், அகரா பன்னாட்டுப் பள்ளியின் தலைவர் பழனி ரத்தினம், சென்னை அண்ணா பல்கலை முன்னாள் பேராசிரியர் இளங்கோ, கல்வி நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ரத்னகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment