தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்ற, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்தியாவின் தேசிய கீதம், ரவீந்திர நாத் தாகூரால் எழுதப்பட்டது. இதில் உள்ள சில வார்த்தைகள், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை புகழும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகளுக்கு பதில், வேறு வார்த்தைகளை சேர்க்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2015, நவம்பரில், சுப்பிரமணியன் சாமி கடிதம் எழுதினார்.
இது தொடர்பாக, பார்லிமென்ட் விவகாரத் துறையின் கருத்தை, மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டது. சுதந்திரப் போராட்ட கால, காங்கிரஸ் கட்சியின் கூட்டம், கோல்கட்டா நகரில், 1911ல் நடந்தபோது, முதன்முதலாக, 'ஜனகனமண' எனத் துவங்கும் பாடல் பாடப்பட்டது. அச்சமயம், பிரிட்டன் மன்னராக இருந்த, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்காக அப்பாடல் எழுதப்படவில்லை என்றும், அரசியல் நிகழ்ச்சிக்காக அந்த பாடல் பாடப்பட்டது
என்றும், பார்லிமென்ட் விவகாரத்துறை விளக்கம் அளித்தது; இது தொடர்பாக, ரவீந்திரநாத் தாகூர் அளித்திருந்த விளக்கத்தையும் சுட்டிக்காட்டியது. முன்னதாக, ராஜஸ்தான் மாநில கவர்னரும், பா.ஜ., முன்னாள் தலைவருமான கல்யாண் சிங், தேசிய கீதத்தில் இடம்பெறும், 'அதிநாயக்' என்ற வார்த்தையை மாற்றம் செய்ய வேண்டுமென, வலியுறுத்தி இருந்தார். ஆனால், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அந்த கோரிக்கையை உடனடியாக நிராகரித்து விட்டது. இந்நிலையில், சுப்பிரமணியன் சாமியின் கோரிக்கையை, மத்திய
அரசு நிராகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக, உள்துறை அமைச்சகத்தின் விரிவான அறிக்கை, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment