தமிழகத்தில், 746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காததால், ஐந்து லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என, தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், பள்ளிகளுக்கு எவ்வளவு இடம் இருக்க வேண்டும் என, மாநகரம், நகரம், கிராமம் வாரியாக, நில அளவுகள் குறித்து, தமிழக அரசு நிபந்தனைகள் விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் குறித்து, 2004ல், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
வழக்கு:
இதையடுத்து, உள்கட்டமைப்பு மற்றும் உரிய நிலம் இல்லாத பள்ளிகளின் அங்கீகாரத்தை, தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இதன் பின், அமைச்சகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை செயலகத்திடம், பள்ளி நிர்வாகிகள் முறையிட்டதும், தமிழக பள்ளிக் கல்வித்துறை திடீரென, அரசாணை வெளியிட்டு, நிலம் குறைவாக உள்ள, 746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், &'பாடம்&' நாராயணன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, நிலம் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு, விதிகளை மீறி அங்கீகாரம் தர மாட்டோம். அந்த பள்ளிகளின் அங்கீகாரம் மே, 31ல் முடிகிறது என, தமிழக அரசு தெரிவித்தது. அதனால், 746 பள்ளிகள் மே, 31க்கு பின் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாடு மெட்ரிக் குலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அதன் நிர்வாக சங்கம் சார்பில், பொதுச் செயலர் எஸ்.கே.வெங்கடாசல பாண்டியன் அளித்த பேட்டி: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வி, தேசிய அளவுடன் ஒப்பிட்டால் தரமானதாக இல்லை. அதன் தரத்தை உயர்த்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நாடு முழுவதும் தரமான கல்வியை கொண்டு வர, அரசு முயற்சிக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.தமிழகத்தில் படிக்கும் வெளி மாநில மாணவர்கள் மீது மற்ற மொழிகளையோ, தமிழ் மாணவர்கள் மீது, மற்ற மாநிலங்களில் வேறு மொழிகளையோ திணிக்க கூடாது. அதற்கான பொது மொழி கொள்கை கொண்டு வர வேண்டும்.
அச்சம்:
தமிழகத்தில் உள்ள, 746 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம், மே, 31ல் முடிகிறது. அதனால், அந்த பள்ளிகளில் படிக்கும், ஐந்து லட்சம் மாணவர், 25 ஆயிரம் ஆசிரியர்களின் எதிர்காலம் என்னாகுமோ என, அச்சத்தில் உள்ளோம். இதுகுறித்து, தமிழக அரசு உடனடியாக உரிய முடிவு எடுத்து, அங்கீகாரத்தை தற்காலிகமாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment