இளமைக் காலம்
தீரர் சத்தியமூர்த்தி புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 1887, ஆகஸ்டு 19-ல் பிறந்தார். தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தாலும், தாயின் முயற்சியால் திருமயத்திலும், கீரனூரிவும் பள்ளிக் கல்வியை முடித்தார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கல்லூரிக் கல்வியை முடித்தார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பி.ஏ. படித்தார். பின் தான் படித்த அதே கிறிஸ்துவ கல்லூரியில் ஆசிரியரானார். சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார். சென்னையில் புகழுடன் விளங்கிய வழக்கறிஞர் வி.வி.சீனிவாச ஐயங்காரிடம் பயிற்சி பெற்று 1910-ல் வழக்கறிஞர் தொலைத் தொடங்கினார்.
விடுதலை இயக்கத்தில் சத்தியமூர்த்தி
1917-ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிப் பெருந்தலைவர்களின் பாராட்டுதலைப் பெற்றார்.
1918-ல் காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாட்டில் அன்னிபெசன்ட் அம்மையாரின் தீர்மானத்தை எதிர்வாதம் செய்த நிகழ்ச்சி சத்தியமூர்த்தியை ஒரு தேசிய தலைவராக அறிமுகப்படுத்தியது.
இங்கிலாந்தில் சத்தியமூர்த்தி
சத்தியமூர்த்தி ஆங்கில மொழியை சரளமாகப் பேசும் ஆற்றல் உடையவர்.
1919-ல் இங்கிலாந்து அரசு அரசியல் சீர்திருத்தங்களை பாராளுமன்றம் முன்பு சமர்பிக்க காங்கிரஸின் தூதுவராக சத்தியமூர்த்தியும் இடம்பெற்றார். ஆறுமாத காலம் இங்கிலாந்திலும், அயர்லாந்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மக்களின் சுதந்திர வேட்கையை எடுத்துரைத்தார்
1920-ல் இந்தியா திரும்பினார்.
1928-ல் மறுபடியும் இங்கிலாந்து சென்று சுயராஜ்ய கட்சியின் நோக்கங்களை எடுத்துரைத்தார்.
சுயராஜ்ய கட்சியில் சத்தியமூர்த்தி
1920-ல் இங்கிலாந்திலிருந்து திரும்பிய சத்தியமூர்த்தி தனது வழக்கறிஞர் தொழிலை விடுத்து காங்கிரஸ் இயக்கத்தின் முழு நேர தொண்டரானார். ஒத்துழையாமை இயக்கத்தினை காந்தி அறிவித்தபோது அதில் ஈடுபட்டு தமிழமெங்கும் சென்று கொள்கை விளக்கம் செய்தார். சுயராஜ்ய கட்சியில் சேர்ந்த சத்தியமூர்த்தி பல மேடைகளில் தனது சொல்லாற்றலால் மக்களை கவர்ந்ததால் இந்தியா முழுவதும் அவரது புகழ் பரவியது.
சட்டசபை உறுப்பினராக சத்தியமூர்த்தி
1923-ல் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகள் தொகுதியிலருந்து சுயராஜ்ய கட்சியின் சார்பின் சென்னை மாகாண சட்டசபைக்கு சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். நீதிக்கட்சியின் ஆட்சியில் மதுவிலக்கு, தீண்டாமை, சமுதாய ஏற்றுத்தாழ்வு, பெண்கல்வி, பெண்ணுரிமை ஆகியவை பற்றி சட்டசபையில் பேசினார்.
பாரதியாரின் கவிதைப் புத்தகங்களை அரசு தடை செய்ததற்கு எதிராக இவர் சட்டமன்றத்தில் பேசிய பேச்சுக்கள் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சிறப்பான இடத்தை பெற்றது.
1926-ல் மீண்டும் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1930-ம் ஆண்டு வரை உறுப்பினராக இருந்தார்.
1929-ல் சைமன் கமிஷன் எதிர்ப்பு இயக்கத்தில் தீவிர பங்கு வகித்தார்.
1930-ம் ஆண்டின் இறுதியில் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தின் போது, தடையை மீறி தேசிய கொடியை ஏற்றியதற்காக ஆறு மாதம் சிறை தண்டணை அடைந்தார்.
1931- ஜனவரி 1-ம் தேதி அந்திய துணிகள் விற்கும் கடைமுன் மறியல் செய்ததற்காக மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
1934-ல் டெல்லி மத்திய சட்டசபைக்கு சென்னை நகரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1936 பிப்ரவரி 20-ம் தேதி அடக்குமுறை சட்டதிருத்த மசோதாவைக் கொண்டு வந்து ஏறத்தாழ ஆறுமணி நேரம் தொடர்ந்து பேசினார் சத்தியமூர்த்தி.
சென்னை மேயராக சத்தியமூர்த்தி
1939 நவம்பர் 6-ல் சென்னை மேயராக சத்தியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் மேயராக பதவி வகித்த போது பூங்காங்கள் அமைத்தல், சாலை விரிவுபடுத்துதல், தெருக்களை சுத்தம் செய்தல், வீடுகளில் சுகாதாரம், உலகப் புகழ் பெற்ற மெரினா கடற்கரையை பராமரித்தல், சாலைகளின் இரு பக்கங்களிலும் மக்கள் நடக்க தனி பாதை அமைத்தல் ஆகியன செயல்படுத்தப்பட்டன.
சென்னை நகரின் குடிநீர் பஞ்சம் போக்க சென்னைக்கு அருகில் பூண்டி குசஸ்தலை நதியில் அணைகட்ட ஏற்பாடு செய்தது இவரின் மேயர் பணியில் ஒரு மைல் கல் எனலாம்.
இந்த நீர்தேக்கம் தற்போது சத்தியமூர்த்தி சாகர் என்று பெயரிடப்பட்டு அவர் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராகப் பல ஆண்டுகள் பதவி வகித்து கல்வித் துறையில் தமிழை பாட மொழியாக கொண்டுவர வேண்டுமென்று வாதாடினார்.
1929-ல் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக காரணமானவர்களுள் சத்தியமூர்த்தியும் ஒருவர் ஆவார்.
சத்தியமூர்த்தியின் இறுதிகட்ட போராட்டங்கள்
1940-ல் சத்தியாகிரக போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி ஒன்பது மாதங்கள் சிறை தண்டனை பெற்றார்.
1942 ஆகஸ்ட் 8 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் அரக்கோணத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரகசியமாக மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி சிறைக்கு மாற்றப்பட்டு, உடல் நலக் குறைவால் மீண்டும் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டார்.
சென்னை பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சத்தியமூர்த்தி சிகிச்சை பலனளிக்காமல் போகவே 1943 மார்ச் 28-ல் சத்தியமூர்த்தி உயிர் நீத்தார்.
முடிவுரை
53 வயது வரையே வாழந்த சத்தியமூர்த்தி விடுதலை போராட்டத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்ட தியாகியாவார்.
இந்திய பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில் ஒரு காவியமாக 1987ல் அவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. சென்னை, புதுக்கோட்டை, திருமயம் ஆகிய இடங்களில் இவரது முழு உருவச் சிலை வைக்கப்பட்டு சத்தியமூர்த்தியின் நினைவு போற்றப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கட்டடத்தின் பெயர் சத்தியமூர்த்தி பவனாகும். அன்னாரின் நினைவு நாளில் அவரது தியாகத்தை நினைவு கூர்வோம்.
ஆக்கம்: சீனிவாசன், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, கங்கலேரி, கிருஷ்ணகிரி மாவட்டம்
No comments:
Post a Comment