வேலூர் அருகே அரசு பள்ளியில், மாணவியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். வேலூர் அடுத்த இடையன்சாத்து அரசு உயர்நிலைப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக குமார், 48, பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் நர்சரி பள்ளியையும் நடத்தி வருகிறார். கால்பந்து, கைப்பந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக, மாணவியருக்கு மட்டும் பயிற்சி அளிப்பதாகக் கூறி, தினமும் மாலை, 4:30 மணியில் இருந்து 6:00 மணி வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தி வந்ததாக தெரிகிறது.
அப்போது, மாணவியருக்கு ஆசிரியர் குமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியரில் பெரும்பாலானோர், கிராமங்களில் இருந்து வருபவர்கள் என்பதால், தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வீட்டிலும், வெளியிலும் சொல்வதற்கு கூட பயந்து வந்ததாக தெரிகிறது.
இதுவே, ஆசிரியர் குமாருக்கு, சாதகமாக அமைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இதை தட்டிக்கேட்ட மாணவ, மாணவியர் ஒரு சிலரை, அடித்துக் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆசிரியரின் தொல்லை எல்லை மீறி போகவே, பள்ளி மாணவியர் மற்றும் பெற்றோர், கடந்த சில நாட்களுக்கு முன், வேலூர் எஸ்.பி., பகலவனிடம் புகார் கொடுத்தனர். அதன் மீது விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
பாலியல் புகார் தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன் விசாரணை நடத்தினார். இதில் புகார், உண்மைதான் என்று தெரியவந்தது. இதையடுத்து, வேலூர் மாவட்ட கல்வி அலுவலரின் பரிந்துரையை ஏற்று, முதன்மைக் கல்வி அலுவலர், உடற்கல்வி ஆசிரியர் குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment