பள்ளி இறுதித் தேர்வு என்பது வாழ்வில் ஒரு முக்கியக் கட்டம். அந்தத் தருணத்தில் கவனமாக இருத்தல் மிக அவசியமாகிறது! தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மனம் சங்கடப்படும் படி பெற்றோர்கள் சண்டை போட்டுக் கொள்ளுவது, வீட்டிற்கு விருந்தினர்களை வரவழைத்து கூட்டம் போடுவது, வேண்டாத விஷயங்களுக்கு பிள்ளைகளோடு விவாதம் செய்வது, அவர்களை உறவினர்களின் இல்ல விழாக்களுக்கு வரும்படி தொந்தரவு செய்வது இவை எல்லாம் தவிர்த்தல் நல்லது.
என்ன சாப்பிடலாம்?
உணவு என்று வரும் போது வெளிச்சாப்பாடு நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் குறிப்பாக புதிய உணவு வகைகள், ஒவ்வாத உணவு வகைகள், அசைவ உணவுகள் வேண்டாம். இருமல், சளி பிடிக்கும் வண்ணம் ஐஸ் கிரீம், ஜில்லென்று ஜூஸ் வகையறா தவிர்த்தல் வேண்டும்.
சக்தி மிகுந்த உணவு, குறிப்பாக புரதச் சத்து உள்ள ஆகாரம் நல்லது. பச்சைக் காய்கறிகள், கீரை, சூப், பழங்கள், பால், முட்டை இவை மிக நல்லது. படிக்கும் போது ஹெவி சாப்பாடு சாப்பிட்டால் தூக்கம் தான் வரும். ஜங்க் புட் என்று சொல்லக்கூடிய பிட்சா, பர்கர், எண்ணைப் பதார்த்தங்கள், நிச்சயம் நல்லதல்ல. சில ஆசிரியர்கள், தேர்வுக்கு செல்லும் முன்பு ஒரு சாக்லெட் (குறிப்பாக க்ளுகோஸ் இருக்கும் ஒன்று) சாப்பிட்டு செல்லும் போது கூடுதல் எனெர்ஜி கிடைக்கிறது, என்கிறார்கள். முயற்சித்து பார்க்கலாம். சிலருக்கு அதுவே இருமல் கொண்டு வரும் என்றால் தவிர்த்து விடுங்கள்.
குறிப்பாக தேர்வு சமயத்தில் இரவு நேரத்தில் இலகுவான தோசை, இட்லி, இடியாப்பம் போன்ற எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவு எடுத்தக் கொள்ளுதல் நல்லது. நிறைய தண்ணீர் குடித்தல் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். தேர்வுக்கு செல்லும் முன்பு காலை உணவு கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். மூளை சரியாக இயங்கவும், மூன்று மணி நேர தேர்வினை எதிர்கொள்ள தேவையான உடல் பலம் கிடைக்க வேண்டும் என்றால் வெறும் வயிறுடன் வீட்டை விட்டு கிளம்புதல் தவறு. சூப், பிரட், பால் போன்ற உணவாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.
மனசும் அவசியம்
உணவு எப்படி உடலுக்கு முக்கியமோ அப்படி சில விஷயங்கள் மனதிற்கு முக்கியம். அவை தியானம், யோகா, பிரார்த்தனை, மூச்சுப் பயிற்சி போன்றவை. குறைந்தது ஒரு பத்து நிமிடம் அதற்கு ஒதுக்கினால் போதும். அந்த நேரம் செலவு அல்ல முதலீடு என்பது தான் உண்மை. உடல் பலம் பக்கம் பக்கமாக எழுதுவதற்கு உதவலாம். ஆனால் கடினமான கேள்விகள் அல்லது படிக்காத கேள்விகள் வந்து விட்டாலோ மனபலம் தான் அங்கே துணை நிற்கிறது!
படிக்காத கேள்விகள் வந்து விட்டால் சிலருக்கு உடல், உள்ளங்கை வேர்க்கிறது அல்லது உடல் நடுங்குகிறது. சில பிள்ளைகள் சூழலை சந்திக்க முடியாமல் விடைத்தாளை எதுவும் எழுதாமல் மடித்துக் கொடுத்து விடுவதும் உண்டு!
செய்தித்தாள்கள் பயமுறுத்தும் படி சிலர் மன வருத்தத்தில் தவறான முடிவுகள் எடுப்பதும் நாம் கேள்விப்படுவது உண்டு. ஆகவே மனஉறுதி மிக மிக அவசியமான ஒன்றாகிறது. தன்னம்பிக்கை இருப்பவர்கள் தவறான செயல்கள் செய்வதில்லை. தன்னம்பிக்கை வளர்வதற்கு கடின உழைப்பு, திறன் வளர்ப்பு, சரியான திட்டமிடுதல், எல்லாம் தேவைப்படுகிறது. சவால்களை சந்திக்கும் தைரிய மனநிலை என்பது பெற்றோரும், ஆசிரியர்களும் மிகச் சுலபமாக ஏற்படுத்தி விடமுடியும்!
மேற்கொண்டு என்ன படிக்க வேண்டும் என்று நிறைய மாணவ, மாணவிகள் முன்கூட்டியே முடிவெடுத்து விடுவதால், நினைத்தது நடக்க வேண்டும் என்றால், குரூப் பாடங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுவதுடன், ஆங்கிலம், தமிழ் போன்ற மொழித் தேர்வுகளில் கூட அதிக மதிப்பெண் பெறவேண்டியநிலை உள்ளது. ஆகவே எல்லா தேர்வுகளுமே முக்கியம் என்ற மனோபாவத்தோடு இருப்பது நல்லது.
உங்கள் பெயர் பள்ளி பலகையிலோ, பத்திரிகையிலோ வராது போகலாம். ஆனால் அதற்காக ஆசைப் பட்டால் என்ன தவறு? எது செய்தாலும் நான் அதில் சிறந்து விளங்குவேன் என்பதே மிக நல்ல மனோபாவம். நீங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றால் உங்களுக்கு மட்டுமா பெருமை? உங்கள் குடும்பத்திற்கு, ஆசிரியருக்கு, பள்ளிக்கு, உங்கள் மாநிலத்திற்கே பெருமை அன்றோ?
இது போட்டி யுகம்; நூற்றுக்கு நூறு என்பது கூட சற்று குறைவு தான் எனும் நிலை ஆகி விட்டது. எனவே நீங்கள் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல என்று உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருக்கும் உலகுக்கும் நிரூபிக்கும் மிக முக்கிய சமயம் இது. ‘பெஸ்ட்’ மட்டுமே கொடுங்கள்!
அதற்கு...
1. ஒழுக்கமாக இருங்கள்
2. நேரத்தை துல்லியமாக திட்டமிடுங்கள்
3. உணவில் கவனமாக இருங்கள்
4. யோகா, தியனாம், உடல் பயிற்சி செய்யுங்கள்
5. வெறும் வயற்றில் தேர்வுக்கு செல்லாதீர்கள்
6. மனதை அமைதியாக வைத்திருங்கள்
7. உங்களை, உங்கள் திறமையை, கடவுளை நம்புங்கள்
8. ஆறு மணி நேரம் தூங்குங்கள்
9. அவ்வப்போது சற்று ஓய்வு எடுங்கள்
10. தேர்வில் சமயோசித அறிவைப் பயன்படுத்தி, நேர மேலாண்மையோடு சிறப்பான விடை எழுதுங்கள். நேர்மை கடைபிடியுங்கள்
11. கவனச் சிதறல்களுக்கு இடம் தர வேண்டாம்
12. மனதை எப்போதும் தளர விட வேண்டாம்.
வாழ்த்துக்கள்!
-முனைவர் பாலசாண்டில்யன்
No comments:
Post a Comment