கடந்தாண்டு போல் இல்லாமல், இம்முறை பொதுத்தேர்வில் சில பாடங்கள் கடினமாக இருந்ததால், தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; சென்டம் குறைய வாய்ப்புள்ளது.
கடந்தாண்டு நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், திருப்பூர் மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தனர். திருப்பூரில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பெற்றனர். பல மாவட்டங்களிலும், மாநில அளவில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றதால், பெற்றோரும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். பலரும் "சென்டம்&' பெற்று, ஆச்சரியத்தை அளித்தனர்.
பொதுத்தேர்வு என்பது, மாணவர்களின் உயர்கல்வியை நிர்ணயிப்பது. நன்கு படித்த தகுதியான மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற வேண்டும். சராசரி மாணவர்கள் கூட அதிக மதிப்பெண் பெறுவது, உயர்கல்வி பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும்; பொதுத்தேர்வில், மிக எளிமையாக வினாத்தாள் தயாரிப்பது, மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அச்சத்தை போக்கும். மாணவர்களின் தகுதியை நிர்ணயிப்பதற்கு, இது சரியான வழியல்ல என, கல்வி ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
கல்வித்தரத்தை மேம்படுத்த, பல கோடி ரூபாய் செலவில் நலத்திட்டங்களை செயல்படுத்தும் நிலையில், அனைத்து மாணவ, மாணவியரும் அதிக மதிப்பெண் பெற்று, அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் விதமாக, பொதுத்தேர்வு வினாக்கள் மிக எளிதாக கேட்கப்படுவதாக, பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.
இதற்கு மாறாக, தற்போது நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், கணிதம், வேதியியல், விலங்கியல், வணிக கணிதம் உள்ளிட்ட பாடத்தேர்வுகள் கடினமாக இருந்தது, மாணவ, மாணவியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கம்போல், கடந்தாண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களாக இல்லாமல், பாட புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட வினாக்கள் இடம் பெற்றதால், பதில் எழுத முடியாமல், பலரும் திணறினர். மதிப்பெண் நிச்சயம் குறையும் என்பதால், பலரும் கவலையில் உள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நேற்று நடந்த ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்விலும், ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் சிரமத்தை ஏற்படுத்தியதாக மாணவ, மாணவியர் புலம்பினர். எனவே, கடந்த முறை போல் இல்லாமல், இம்முறை மாணவ, மாணவியர் தேர்ச்சி விகிதம் குறைவதோடு, சென்டம் பெறுவோர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. மாநில அளவில் ரேங்க் பெறுவோர் எண்ணிக்கை குறையலாம் என்பதால், பெற்றோரும், ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment