வரும் மே மாதத்துடன் அங்கீகாரம் முடியும், 746 பள்ளிகள் எவை என தெரியாமல், பெற்றோர் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த பள்ளிகளின் பட்டியலை, இணையதளத்தில் வெளியிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், போதிய நிலம் இல்லாத, 746 பள்ளிகளுக்கு, ஐந்து ஆண்டுகளாக தற்காலிக அங்கீகார நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பள்ளிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், ’பாடம்’ நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ’மே, 31ம் தேதியுடன் இந்த பள்ளிகளுக்கு, அங்கீகாரம் முடிகிறது; இனி, அங்கீகாரம் நீட்டிக்கப்படாது’ என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டில், ஜூன் முதல், 746 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்தாவதால், மாணவர்களை சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வகையில், ஐந்து லட்சம் மாணவர்; 25 ஆயிரம் ஆசிரியர்களின் கதி என்ன என தெரியாமல் பள்ளிகள் தவிக்கின்றன.
இதேபோல், மாணவர்களின் பெற்றோரும் கூடுதல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஜூன் முதல், 746 பள்ளிகள் மூடப்படுமா; அவை எந்த பள்ளிகள்; நம் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளா; பள்ளிகளை மூடினால் மாற்று ஏற்பாடு என்ன? என, தெரியாமல் தவிக்கின்றனர்.
பெற்றோர் சிலர் கூறும்போது, ’குழப்பத்தை தீர்க்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை, அரசு இணையதளத்தில், அங்கீகாரம் இழந்த பள்ளிகளின் பட்டியலை, முகவரியுடன் வெளியிட வேண்டும். அங்கீகாரம் முடியும் பள்ளிகளின் மாணவர்களை, மற்ற பள்ளிகளில் சேர்க்க, அரசே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, தெளிவான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும்’ என்றனர்.
No comments:
Post a Comment