பல்கலை மற்றும் கல்லுாரிகளில், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும், தமிழக உயர்கல்வி மன்றத்தில் நிகழ்ந்த அடுக்கடுக்கான மாற்றங்களால், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர்.
உயர்கல்வி துறையின் அதிரடி நடவடிக்கைகளால், கல்வியாளர்கள் நடுக்கத்தில் உள்ளனர். தமிழக உயர்கல்வி மன்றத்தில், கல்வியாளர்களே உறுப்பினராகவும், உயர் பொறுப்புகளிலும் இருப்பர். ஆனால், ஐந்து ஆண்டுகளாக, உயர்கல்வி மன்றத்துக்கு வரும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள், எங்கே, யாருக்கு நிறைவேற்றப்பட்டன என்று தெரியாமல், கல்வியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கூடுதல் பொறுப்பு:
இதுகுறித்து உயர்கல்வி வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்: உயர்கல்வி மன்றத்தின் தலைவர், உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன். மன்றத்தின் துணை தலைவராக, குமார் ஜெயந்த் பதவி வகித்தார். அவருக்கு பின், யாருக்கும் அந்தப் பதவி வழங்கப்படவில்லை. மாறாக, உயர்கல்வி செயலர் அபூர்வாவே கூடுதல் பொறுப்பாக, அதை கவனித்து வந்தார்.
இந்நிலையில், மன்றத்தின் உறுப்பினர் செயலராக இருந்த கரு.நாகராஜன், 2015 நவம்பரில் திடீரென நீக்கப்பட்டு, அந்த இடத்தில், தொல்லியல் துறை கமிஷனர் சித்திக் நியமிக்கப்பட்டார். அவரையும், பிப்ரவரியில் திடீரென நீக்கி, உயர்கல்வி செயலகம் உத்தரவிட்டது. தற்போது, அந்த இடத்தில், கல்லுாரி கல்வி இயக்குனர் சேகர் கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார்.
அவரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி உள்ளார். உயர்கல்வி செயலகத்தின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல், உயர்கல்வி மன்றத்தில் மத்திய அரசு திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த, பேராசிரியர் அமுதா பாண்டியன், ஆர்.கே.நகர் கல்லுாரியின் முதல்வராக மாறி விட்டார். அவருக்கும், சீனியாரிட்டி விதியை மீறி, பதவி உயர்வு கொடுத்துள்ளதாக, பிரச்னை எழுந்துள்ளது.
இதேபோல, உயர்கல்வி மன்றத்தில் மத்திய அரசு திட்டத்தின் மற்றொரு, ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் ஜெயசுதாவும், சில தினங்களுக்கு முன், பாரதி மகளிர் கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த இடத்தில், ராணி மேரி கல்லுாரி பேராசிரியர்கள் மரியா ப்ரீத்தி, அனிதா நியமிக்கப்பட்டுள்ளனர்.
குழப்பத்தின் குட்டை:
இம்மாத இறுதிக்குள், திட்டப் பணிகளுக்கான நிதிக்கு கணக்கு காட்டும் வகையில் செயல்பட கெடு விதிக்கப்பட்டதால், அவர்களும் எப்போது வேண்டுமானாலும், மன்றத்தில்இருந்து வெளியேறலாம். இவ்வாறு உயர்கல்வி மன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இப்படி பல்வேறு பிரச்னைகளால், ரூசா என்ற மத்திய அரசின் உள்கட்டமைப்பு திட்டங்கள்; கல்லுாரி பேராசிரியர் பயிற்சி வகுப்புகள்; மாணவர்களுக்கான ஆங்கில பயிற்சி திட்டம்; பாலிடெக்னிக் மாணவருக்கான புத்தக தயாரிப்பு; வேலைவாய்ப்பு நேர்காணல் நடத்துதல் போன்ற பணிகள் முடங்கி, குழப்பத்தின் குட்டையாக உயர்கல்வி மன்றம் மாறியுள்ளது.
மத்திய அரசு நிதியுதவி:
தமிழக உயர்கல்வி மன்றம், சென்னை, கடற்கரை சாலையில் செயல்படுகிறது
பல்கலைகள், கல்லுாரிகளுக்கு உள்கட்டமைப்பு மேம்படுத்துதல்; புதிய பாடத்திட்டத்தை உருவாக்குதல்; பாடப் புத்தகம் தயாரித்தல் போன்ற பணிகள், இந்த மன்றத்தால் மேற்கொள்ளப்படுகின்றன
மன்றத்தின் தலைவராக அமைச்சர்; துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் செயலராக கல்வியாளர் நியமிக்கப்பட வேண்டும். மன்ற உறுப்பினர்களாக, உயர்கல்வி சார்ந்த துறை செயலர்கள் பொறுப்பு வகிக்க வேண்டும்
கல்லுாரிகளில் இருந்து மாற்றுப்பணியில் வரும் பேராசிரியர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளராகவும், உறுப்பினர் பதவியிலும் இருப்பர் மன்றத்தின் திட்ட பணி செலவுகளில், 50 சதவீதத்துக்கு மேல், மத்திய அரசே நிதியுதவி அளிக்கிறது.
No comments:
Post a Comment