ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் வருகையால், பொதுத்தேர்வு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அறை மூலம் புகார்கள் பெறப்பட்டு, பிரச்னை கள் தீர்க்கப்படுகின்றன.
ஆனால், சில தினங்களாக, அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் சிலர், தேர்வுத்துறை இயக்குனர், இணை இயக்குனர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வந்து, மனு கொடுத்த வண்ணம் உள்ளனர். ஒரு சங்கத்தை பார்த்து, மற்றொரு சங்கம் என, வரிசையாக தினமும் சங்க நிர்வாகிகள் வருவதால், தேர்வுத்துறை அதிகாரிகள் நிலை குலைந்துள்ளனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் சிலர் கூறியதாவது:தேர்வுத்துறைக்கு என, பெரிய அளவில் ஊழியர் இல்லை. அதனால், பள்ளிக்கல்வி, மெட்ரிக், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தொடக்க கல்வி இயக்குனரக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் நிலைமையை சமாளிக்கிறோம். தேர்வு தொடர்பான, துறை ரீதியான ரகசிய பணிகளில் உள்ள போது, சங்க நிர்வாகிகள் வந்து, அதிகாரிகளை சந்திக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் வருகை தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடிக்கடி வரும் சங்க நிர்வாகிகளால், பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. சங்கத்தினராக இருந்தாலும், தேர்வு கட்டுப்பாட்டு அறை மூலம் புகார்களை பதிவு செய்தால், நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்பு கொள்வது எப்படி?பொதுத்தேர்வுகள் குறித்த புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்க, அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில், முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில், தினமும் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். புகார் அளிக்க விரும்புவோர், 80125 94114, 80125 94124, 80125 94125, 80125 94126 ஆகிய தேர்வு கட்டுப்பாட்டு அறை போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment