பிளஸ் 2 வேதியியல் தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விக்கு ஒரு மதிப்பெண்; பிழையான கேள்விக்கு ஐந்து மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்திற்கு மார்ச், 14ல் தேர்வு நடந்தது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கேள்வித்தாள் கடினமாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள்மாணவர்கள் சிந்தித்து எழுதும்வகையில் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,கேள்வித்தாள் போல அமைக்கப்பட்டிருந்தது.அதனால், இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில், 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறையும்; தேர்ச்சி விகிதம் குறையும் என, ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த தேர்வில், பாட புத்தகத்தில் இல்லாத கேள்வி, ஒரு மதிப்பெண் பிரிவில் இடம் பெற்றது. அதாவது 'ஏ' வகை கேள்வித்தாளில் 18 மற்றும் 'பி' வகை கேள்வித்தாளில் 17 ஆகிய கேள்விகள் 'அவுட் ஆப் சிலபஸ்' ஆக இருந்தன. அதேபோல் 70வது கட்டாய கேள்வியில், '11' என்ற எண்ணுக்கு பதில், ரோமன் எழுத்து, 'II' இருந்தது. அதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்து சரியான பதில் அளிக்க முடியவில்லை.
ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தோர், தேர்வுத்துறை இயக்குனரை சந்தித்து போனஸ் மதிப்பெண் கேட்டனர்.தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி இந்த இரண்டு கேள்விகளுக்கும், மொத்தம் ஆறு மதிப்பெண் போனசாக வழங்க உத்தரவிட்டார். 'தேர்வுத் துறையே தவறாக அச்சிட்டத்தால், இது கருணை மதிப்பெண் அல்ல; போனஸ் மதிப்பெண்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment