10-ஆம் வகுப்பு ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வில், எழுத்துப் பிழையுடன் அமைந்திருந்த ஒரு வினாவால் குழப்பம் அடைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. சுமார் 10.72 லட்சம் மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர்.
இந்த நிலையில், ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்தத் தேர்வு பொதுவாக எளிதான வினாக்களுடன் இருந்ததாகவும், கூடுதலான மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இருப்பதாகவும் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் மொழிமாற்றம் செய்யக் கூடிய பகுதியில், சென்னை உள்நாட்டு விமான நிலையம் தொடர்பான வினாவாக இடம் பெற்றிருந்த 19-ஏ வினாவில், இரு எழுத்துப் பிழைகள் இருந்தன.
வினாவின் மையக் கருத்தான விமான நிலையம் என்ற வார்த்தையே தவறாக இருந்ததால் குழப்பம் அடைந்ததாகவும், இதனால் அந்த முதல் வினாவுக்கு மாற்றாக வரைபடம் மூலம் விளக்கம் அளிக்கக் கூடிய 19-பி வினாவைத் தேர்வு செய்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், சென்னை சுற்றுப் பகுதி மாணவர்களுக்கு மட்டுமே இந்த மொழிமாற்ற வினா எளிதானதாக இருந்திருக்கும் என்று ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் தரப்பிலும் கூறப்பட்டது.
முறைகேடு- 8 பேர் பிடிபட்டனர்: இதற்கிடையே, ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 8 தனித் தேர்வர்கள் பிடிபட்டனர். அதிகபட்சமாக ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 3 பேர் பிடிபட்டதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment