மருத்துவம் படிக்க வைப்பதாக கூறி, ரஷ்யாவில் கழிவறை கழுவ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர். கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தேனி, தஞ்சாவூர், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களை சேர்ந்த, எட்டு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம், ஒரு புகார் மனு அளித்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில், ஆதாம் டிரஸ்ட் - ஆல்பா கன்சல்டன்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தினர், பிளஸ் 2 முடித்த மாணவர்களை, ரஷ்யாவில் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க வைப்பதாக விளம்பரப்படுத்தினர். கடந்தாண்டு நிறுவனத்தை அணுகினோம். அப்போது அட்மிஷன் செய்ய, 25 ஆயிரம் ரூபாய் கட்ட அறிவுறுத்தினர்.
ஒரு ஆண்டு உதவித் தொகையாக, 4 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், நல்ல அரசு கல்லூரியில் சீட் வாங்கி தருவதாகவும், இரண்டாம் ஆண்டு வங்கி கடன் பெற வழிவகை செய்வதாகவும் தெரிவித்தனர். இதை நம்பி, அட்மிஷன் தொகையை செலுத்தினோம். பின், அவர்களது அறிவுறுத்தலின்படி, வங்கி கணக்கில் 75 ஆயிரம் ரூபாய் செலுத்தினோம்.
ரஷ்யா கிளம்பும் ஒருநாள் முன், 1.86 லட்சம் ரூபாய் கட்ட சொல்லி வாங்கினர். இதன்பின், கடந்தாண்டு ரஷ்யா செயின்ட் பீட்டர்ஸ் பார்க் ஸ்டேட் மெடிக்கல் பல்கலையில் சேர்ப்பதாக சொல்லி ஒரு மட்டமான டியூஷன் சென்டரில் சேர்த்து விட்டனர். அங்கு 2 மணி நேரம் வகுப்பு நடத்திவிட்டு, ஒரு மருத்துவமனையில் கழிவறை கழுவவைத்தனர்; அறையை சுத்தம் செய்ய வைத்தனர்.
பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு மிரட்டினர். அங்கு தங்கியிருந்த தமிழக மக்கள் வாயிலாக, இந்திய தூதரகத்தை அணுகி, புகார் அளித்து, தப்பி வந்தோம். எங்களை போன்று பலரிடம், மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த ஆல்பா கன்சல்டன்சியை சேர்ந்த எஸ்தர் அனிதா, ஜான்பிரிட்டோ, காமராஜ், ஆன்டனி, ஜெனிபர் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து கேட்க, ஆதாம் டிரஸ்ட்-ஆல்பா கல்சல்டன்சி நிறுவனத்தினரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும், போனை எடுக்கவில்லை.
40 பேர் சிக்கியுள்ளனர்
தப்பி வந்த மாணவர்கள் கூறுகையில், எங்களை போல் ரஷ்யாவில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்களையும் ஆல்பா கன்சல்டன்சி நிறுவனம்தான் அனுப்பி வைத்துள்ளது. அங்கு மருத்துவமனையில் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர்களை மீட்டு, ஆல்பா கன்சல்டன்சி நிறுவனத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment