தமிழகத்திலுள்ள, 234 தொகுதி பெயர்களை, மனப்பாடமாக சரளமாக ஒப்பித்து, 7 வயது அரசு பள்ளி மாணவி அசத்தினார். அவருக்கு, பணமுடிப்பு வழங்கிய சப் - கலெக்டர், தேர்தல் துாதுவராகவும் அறிவித்தார்.சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ஓட்டளிக்க வாருங்கள் என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலைக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
செய்யாறு சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலரும், சப் - கலெக்டருமான பிரபுசங்கர் தலைமை வகித்தார். தேர்தல் குறித்த தகவல்கள் வீடியோ காட்சி மூலம் விளக்கப்பட்டது. கல்லுாரியில் பயிலும், 18 வயது பூர்த்தியான அனைத்து மாணவ, மாணவியரையும் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்த்தமைக்காக, கல்லுாரி முதல்வர் நிர்மலாதேவிக்கு பாராட்டு தெரிவித்து,சான்றிதழ் வழங்கப்பட்டது.செய்யாறு தொகுதியில், 90 வயதுக்கு அதிகமான, 7 மூத்த வாக்காளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து, கல்லுாரி மாணவர்கள் நினைவுப் பரிசு வழங்கினர்.
வந்தவாசி அடுத்த விளாநல்லுார் கிராமத்திலுள்ள, அரசு நடுநிலைப் பள்ளியின், 2ம் வகுப்பு மாணவி கே.பிரீத்தி, தமிழகத்திலுள்ள, 234 தொகுதிகளின் பெயர்களையும், மாவட்டம் வாரியாக சரளமாக ஒப்பித்து, பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். மாணவி பிரீத்தியை பாராட்டிய, தேர்தல் அலுவலர் பிரபுசங்கர், ஊக்கத்தொகையாக, 2,100 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கி, பிரீத்தியை தேர்தல் துாதுவராக நியமித்தார்.
No comments:
Post a Comment