'தமிழக உயர்கல்வித் துறையில் நடந்த விதிமீறல்கள் குறித்து, விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்' என, பேராசிரியர்களின், 'நெட் மற்றும் ஸ்லெட்' சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, 'நெட் மற்றும் ஸ்லெட்' சங்க தலைவர் தங்க முனியாண்டி அளித்த பேட்டி: தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கான உதவி பேராசிரியர் நேரடி நியமனத்தில், பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின், 2009 மற்றும், 2010ம் ஆண்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியமே கல்வி தகுதியை நிர்ணயித்தது, சட்டத்துக்கு புறம்பானது. நடவடிக்கை இல்லை அதனால், குறைந்த பட்ச கல்வித்தகுதி இல்லாத பலர், உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அளித்த புகாரில், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 3,120 ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, 2012ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக, கல்லுாரி கல்வி இயக்ககம் சார்பில், அரசு கல்லுாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், உதவி பேராசிரியர் நியமனத்திற்கு தவறான முறையில் கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'அரசு உதவி கல்லுாரிகளில் காலியிடங்களை நிரப்ப, அரசின் அனுமதி தேவையில்லை' என, நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தும், 'பணி நியமனத்துக்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும்' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், மறைமுகமாக பணி நியமனத்துக்கு பணம் பெற்று, முறைகேடுக்கு வாய்ப்புஉள்ளது.
இந்த பிரச்னையால், மதுரை தியாகராஜர் கல்லுாரி, அருள் ஆனந்தர் கல்லுாரி, லேடி டோக் கல்லுாரி, பாத்திமா கலை கல்லுாரி ஆசிரியர்கள் பலர், ஊதியமின்றி தவித்து வருகின்றனர்.
இதேபோல், பல்கலை துணைவேந்தர் நியமனத்திலும் விதிகள் மீறப்பட்டுள்ளன. இதில், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு இருக்கும் என, தகவல்கள் கிடைத்து
உள்ளன.
மதுரை காமராஜர் பல்கலையில், முன்னாள் துணைவேந்தர் கற்பக குமார வேல் காலத்தில் நடந்த ஆசிரியர் நியமனம் குறித்து, நீதிபதி ராமன் கமிட்டியின் பரிந்துரைப்படி, இதுவரை விசாரணை செய்யவில்லை. 'திருவள்ளுவர் பல்கலை குறித்து நீதிமன்ற விசாரணைக்கு, தமிழக அரசு போதிய உத்தரவு பிறப்பிக்கவில்லை' என, யு.ஜி.சி., தெரிவித்து
உள்ளது.
அனுமதி தரவில்லை:பாரதியார் பல்கலை சார்பில், தொலைநிலை கல்வி அனுமதி பெற்று விட்டு, நேரடி வகுப்புகள் நடத்தியதாக சான்றிதழ் தருகின்றனர். இந்த பட்டங்கள் செல்லாது என தெரிந்தும், பாடம்நடத்தப்படுகிறது. பல்கலைகளின் தவறான நடவடிக்கைகளால், தொலை நிலை கல்விக்கு, தமிழகத்தில் பல பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., அனுமதி அளிக்கவில்லை.எனவே, இந்த குளறுபடிகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து, தமிழக அரசு நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நியமனங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment