நீலகிரியில், 8,033 மாணவ, மாணவியர், பிளஸ் 2 பொது தேர்வெழுத உள்ளனர். நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி அறிக்கை: பிளஸ் 2 பொது தேர்வுகள், வரும், 4ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், முதல் தேதி வரை நடக்கிறது. நீலகிரியில், 3,662 மாணவர்கள், 4,371 மாணவியர் என, மொத்தம், 8,033 பேர் எழுதவுள்ளனர். குன்னுார் கல்வி மாவட்டத்தில், 22; கூடலுார் கல்வி மாவட்டத்தில், 13 என, 35 மையங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வுப் பணியில், 40 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 35 துறை அலுவலர்கள், 80 பேர் கொண்ட பறக்கும் படை உறுப்பினர்கள், 557 அறை கண்காணிப்பாளர், வினாத் தாள் கொண்ட செல்ல வழித்தட அலுவலர்கள், 12 பேர் என, 724 ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க, பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்கள், வினாத் தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு போதியளவில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் வசதிக்காக, தேர்வு மையங்களில் போதிய கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன; சரியான நேரத்திற்கு தேர்வு மையங்களுக்கு வந்து செல்ல, போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்லி எழுதுபவர்களுக்கு, மொழிப்பாட விலக்கு, தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தரை தளத்திலேயே தேர்வறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குன்னுார் சாந்தி விஜய் பெண்கள் பள்ளி, ஊட்டி புனித ஜோசப் பள்ளி, கூடலுார் மார்னிங் ஸ்டார் பள்ளி, பந்தலுார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில், தனித்தேர்வர்கள், தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு, கணேச மூர்த்தி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment