'தேர்வு அறையில், மனித உரிமைகளை மீறும் வகையில் உயர் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்' என, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.பிளஸ் 2 பொதுத் தேர்வு முறைகேட்டை தடுக்க, கிடுக்கிப்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில், ஆசிரியர்கள் துாங்கி வழிவதை தடுக்க, அவர்களுக்கு நாற்காலி போட வேண்டாம் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனால், ஆசிரியர்கள், பல மணிநேரம் தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர்ராஜ்குமார் கூறியதாவது:பொதுத் தேர்வு, காலை, 9:45 மணிக்கு துவங்கினாலும், ஆசிரியர்கள் அதற்கான நடைமுறைகளுக்காக, காலை, 8:30 மணிக்கு, முதன்மை கண்காணிப்பாளர் அறைக்கு வர வேண்டும். அதனால், வீட்டிலிருந்து காலை, 6:30 மணிக்கே புறப்பட்டு வர வேண்டும்.தேர்வு முடிந்து விடைத்தாள்களை சோதனையிட்டு, முதன்மை கண்காணிப்பாளரிடம் அவற்றை பட்டியலிட்டு ஒப்படைத்து முடித்து, பிற்பகல், 3:00 மணிக்கு தான் வீட்டுக்கு புறப்பட முடியும்; இதனால், 4:30 மணிக்கு தான் வீட்டுக்கு செல்ல முடிகிறது. இடைப்பட்ட நேரத்தில், தேர்வு அறையில் கூட நாற்காலி இல்லாமல் தொடர்ந்து நின்று கொண்டே இருப்பதால், ஆசிரியர்கள், 10 மணி நேரம் வரை தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.
நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளான ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேர்வறையில், 'டீ, காபி' கூட வழங்கப்படுவதில்லை. இது மனித உரிமைகளுக்கு எதிரானது. எனவே, தேர்வு அறையில் நாற்காலி போடவும், டீ, காபி வழங்கவும் தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment