தேர்தல் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் யாரும் அரசியல் பிரமுகர்களை சந்தித்துப் பேசக் கூடாது. அப்படி யாரும் சந்தித்துப் பேசினால் அது தேர்தல் நடத்தை விதி மீறலாகக் கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு ராஜேஷ் லக்கானி சனிக்கிழமை அளித்த பேட்டி:
கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அஃப்) போன்ற சமூக ஊடகங்களில் செய்யப்படும் பிரசாரங்களை கண்காணிப்பதற்கு தனிக் குழு அமைக்கப்படும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.28 லட்சம் வரை தேர்தல் செலவு செய்யலாம். வேட்பாளரின் செலவை சமூக ஊடகங்களின் மூலம் கண்காணிக்க தனி மென்பொருள் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஒரு தனிப்பட்ட நபரை அரசியல் கட்சி சார்பில் விமர்சனம் செய்தால், அது தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றத்துக்கு உள்ளாகும். எனவே, அந்தப் பிரச்னையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
ஆனால், தனிப்பட்ட முறையில் இரு நபர்கள் பரஸ்பரம் விமர்சித்துக் கொண்டால் அதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. காவல்துறையில் புகார் அளிக்கலாம். இதற்கு ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு மாத சிறையும், ரூ.200 அபராதமும் விதிக்கப்படும்.
அரசியல்வாதிகள்-அலுவலர்கள் சந்திப்பு: தேர்தல் ஆணையத்திடம் செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்துள்ள வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் மூலம் தேர்தல் அட்டவணை அனுப்பப்பட்டு வருகிறது.
தேர்தல் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் யாரும் அரசியல் பிரமுகர்களை சந்தித்துப் பேசக் கூடாது.
அப்படி யாரும் சந்தித்துப் பேசினால் அது தேர்தல் நடத்தை விதி மீறலாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல தேர்தல் பணியில் இல்லாத அரசு அலுவலர்களும் அரசியல்வாதிகளை சந்தித்துப் பேசக் கூடாது. அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும். இதுதொடர்பாக அரசு ஊழியர் சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
விளம்பரங்களை அழிக்கும் பணி: தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், அனுமதியில்லாத சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் விளம்பரங்கள் அழிக்கப்பட்டால், அதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட கட்சியிடம் இருந்து வசூலிக்கப்படும்.
அரசு செலவில் அரசுத் துறைகளின் சாதனை விளம்பரங்களைச் செய்யக் கூடாது. சென்னை தீவுத்திடலில் நடக்கும் அரசுப் பொருட்காட்சியில் அப்படி எதாவது விளம்பரம் செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வோம்.
இதுவரை 106 புகார்கள்: தூத்துக்குடி, சென்னை கொளத்தூர் ஆகிய இடங்களில் அரசு நலத் திட்டங்களுக்கான டோக்கன் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுபற்றி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கோரப்பட்டது. அங்கு அனைவருக்கும் ஏற்கெனவே அவை வழங்கப்பட்டு விட்டன என்று தெரிவித்தார்.
கொளத்தூர் பகுதி தொடர்பான புகார் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் விசாரித்தபோது, அவற்றை அறையில் வைத்து சீல் வைத்து பூட்டி விட்டோம் என்று கூறினார்.
இதுபோன்று, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 106 புகார்கள் வந்துள்ளன. அவை தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மாவட்டந்தோறும் கட்செவி அஞ்சல்: புகார்களைப் பதிவு செய்வதற்காக மாவட்டந்தோறும் தனியான கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அஃப்) தொடர்பை உருவாக்க இருக்கிறோம். 1950 என்ற இலவச எண்ணிலும் புகார்களைத் தெரிவிக்கலாம் என்றார் ராஜேஷ் லக்கானி.
No comments:
Post a Comment