ஊழியர்களுக்குத் தொழில்வரியை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிட்டி யூனியன் வங்கி ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் 8-வது ஊழியர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனால், அனைத்து தரப்பைச் சேர்ந்தவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தொழில்வரி விதிக்கப்பட்டது. ஆனால், இப்போது தமிழகம், கேரளம் உள்பட 18 மாநிலங்களில் மட்டுமே தொழில்வரி பிடித்தம் செய்யப்படுகிது. எந்தவித தொழிலும் செய்யாத ஊழியர்களிடம் தொழில்வரி பிடித்தம் செய்வதைத் தமிழக அரசு நீக்க வேண்டும். வருமான வரி உள்பட அனைத்து வரிகளையும் சரியாகச் செலுத்தி வரும் வங்கி ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் வரிவிதிக்க வேண்டும். போனஸ் சட்டத்தில் திருத்தம் செய்து அனைவருக்கும் போனஸ் கிடைக்கச் செய்ய வேண்டும்.
வங்கிகளில் வாராக் கடன்கள் பல கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இந்த வாராக் கடன்களை வசூல் செய்ய மத்திய அரசு கடுமையான சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். வாராக்கடன் வசூல் செய்வதற்கு வங்கி ஊழியர்கள் முழு ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கப் பொதுச் செயலர் ஆர். ரவி தலைமை வகித்தார். சிட்டி யூனியன் வங்கி முன்னாள் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான என். காமகோடி, இயக்குநர் ஆர். மோகன், சிட்டி யூனியன் வங்கி அலுவலர் சங்கப் பொதுச் செயலர் ஏ. ராஜகணேசன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment