தமிழகத்தில் அரசு துவக்கப் பள்ளி மனப்பாடப் பாடல்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், ஆடியோ- வீடியோ வடிவிலான பாடல்களின் இசை தொகுப்பை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. இத்தொகுப்பு சி.டி.,க்களை முதல்வர் ஜெயலலிதா அடுத்த மாதம் வெளியிட ஏற்பாடு செய்யப்படுகிறது.
தொடக்கக் கல்வியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாட புத்தகங்களில் 40 மனப்பாடப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் 'தாயெனப்படுவது தமிழ்' என்ற தலைப்பில் ஆடியோ- வீடியோ வடிவில் இசை தொகுப்பாக தயாரிக்க, எஸ்.இ.ஆர்.டி., நடவடிக்கை எடுத்தது. இதற்காக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆர்வமுள்ள இசை மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆறு மாதங்களாக இசை தொகுப்பு தயாரிக்கப்பட்டது. இதில் மனப் பாடப் பாடல்களில் வரும் பொருள், வரிகள், அமைவிடம் கலாசார பின்னணியுடன் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பாடல்களுக்கு ஏற்ப நடனமாடும் மாணவ, மாணவியர் அனைவரும் அரசு பள்ளிகளில் படிப்பவர்கள். அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மனதில் பாடல் எளிதில் பதியும் வகையில் இசை, காட்சி அமைப்பு, படப் பிடிப்பு இடங்கள் என நுாறு சதவீதம் திரைப்படப் பாடல் பின்னணி யில் படமாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இசை தொகுப்பின் படப்பதிவு இயக்குனர் அமலன் ஜெரோம் கூறியதாவது: எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் முயற்சியில் இத்தொகுப்பு தயாரிக்கப்பட்டு உள்ளது. 'அச்சம் தவிர்' என்ற பாரதியாரின் பாடலில் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது இல்லம் தொடர்பான காட்சிகள் பின்னணியில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இதுபோல் பாடல்களில் இடம் பெற்ற வரிகளுக்கு அதன் வரலாற்று பின்னணி தேவைப்படும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட இடங்களிலேயே பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆகஸ்டில் முதல்வர் ஜெயலலிதா இத்தொகுப்பு சி.டி.,யை வெளியிடுகிறார். அதன்பின் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment