தமிழகத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாமல், பாதுகாப்பற்ற முறையில், 6,000 'பிளே ஸ்கூல்'கள் எனப்படும், முன்பருவ பள்ளிகள் இயங்கி வருகின்றன. பல கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த அனுமதியும் பெறாமல் நடத்தும் இப்பள்ளிகளுக்கு, கல்வித்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ள, 'பகீர்' தகவல் வெளியாகிஉள்ளது.
அதிகரிப்பு
தமிழகத்தின் பல இடங்களில் பள்ளிகள், நர்சிங் பள்ளிகள், காப்பகங்கள் போன்றவை அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது அதிகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரே, அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் பற்றி, கல்வித்துறையும், சமூக நலத்துறையும் யோசிக்கும் நிலை உள்ளது.
இதேபோல, தமிழகத்தில் பல ஆண்டுகளாக எந்த பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றாமல், 'பிளே ஸ்கூல்' எனப்படும் முன்பருவ பள்ளிகள் நடக்கின்றன. இது தொடர்பாக, சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலசுப்ர மணியன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இதன் பின், நீதிமன்ற உத்தரவுப்படி, பிளே ஸ்கூல்களுக்கான தனி பாடத்திட்டத்தை, பள்ளிக்கல்வி துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்தது. தொடக்க பள்ளி இயக்குனரகம் சார்பில், பிளே ஸ்கூல்களுக்கு அங்கீகார விதிமுறைகளும் வகுக்கப்பட்டன. இதன் அடிப்படையில், தமிழக அரசு சார்பில் அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், புதிதாக வகுக்கப்பட்ட விதிகளின் படி, அங்கீகாரம் வழங்கவும், விதிகளை மீறும் பள்ளிகளை மூடவும், கல்வித்துறை நடவடிக்கையை துவக்கவே இல்லை. பல பகுதிகளில், உதவி தொடக்க கல்வி அதிகாரிகளின் ஆதரவுடன், பிளே ஸ்கூல்கள் அங்கீகாரமின்றி இயங்குவதாக கூறப்படுகிறது.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், 1,500 பள்ளிகள் உட்பட தமிழகம் முழுவதும்,
6,000 பள்ளிகள் அங்கீகாரமின்றி இயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'நாராயணா இ - கிட்ஸ், சைதன்யா கிட்ஸ் ஸ்கூல், கிட்ஸீ ஸ்கூல், ஆப்பிள் ஸ்கூல், ஆரஞ்ச் ஸ்கூல்' என பல பெயர்களில், தமிழகத்தில், பிளே ஸ்கூல்கள் இயங்குகின்றன.
இழுத்து மூடுமா?
'இந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா' என, தொடக்க கல்வி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'எந்த பள்ளிக்கும் வழங்கவில்லை' என, தெரிவித்தனர். பல, பிளே ஸ்கூல்களின் வாகனங்களும், பாதுகாப்பு அம்சங்கள் இன்றி இயங்குகின்றன.
அந்த வாகனங்களில் எங்காவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதற்கு அரசின் எந்த துறை பொறுப்பு ஏற்கும் என்பதை கல்வித்துறையும், போக்குவரத்து துறையும், விபத்து நடந்த பிறகே யோசிக்கும் என, தெரிகிறது. இனியாவது, பிளே ஸ்கூல்களை பாதுகாப்பு அம்சங்களுடன் வரைமுறை செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா; இதுபற்றிய முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிடுமா; பாதுகாப்பில்லாத பள்ளிகளை இழுத்து மூடுமா என, பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
கல்வித்துறை அலட்சியம்
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொது செயலர் நந்தகுமார் கூறியதாவது: தமிழகத்தில், பள்ளிகளின் அங்கீகார விஷயத்தில், கல்வித்துறை மெத்தனமாகவும், அலட்சியமாகவும் உள்ளது. 'பிளே ஸ்கூல்' என்ற பெயரில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. இதை அரசு எப்படி அனுமதிக்கிறது என்பது வியப்பாக உள்ளது. இந்த பள்ளிகளுக்கு, கல்வி கட்டணமும் நிர்ணயிக்கவில்லை; அங்கீகாரமும் வழங்கவில்லை.
அதேபோல், போக்குவரத்து துறை அதிகாரிகளும் எந்த விதியையும் பின்பற்றாமல், அங்கீகாரமே வழங்கப்படாத, பிளே ஸ்கூல் பள்ளிகளுக்கு, வாகனம் இயக்க எப்படி அனுமதி அளித்தனர் என, பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த அலட்சியம், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முன், அரசு கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment