’இந்திய ஐ.டி., துறை வேகமாக இயந்திரமயமாகி வருவதால், அதிக திறன் தேவையற்ற அடித்தட்டு பணிகளில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 6.4 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும்’ என, அமெரிக்காவைச் சேர்ந்த, ஆய்வு நிறுவனமான எச்.எப்.எஸ்., தெரிவித்துள்ளது. ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறை, கணினி சார்ந்த செயல்பாடுகளை கொண்டுள்ளது. இதில், ’ஹார்டுவேர்’ எனப்படும், சாதனங்கள், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில், ’ரோபோ’ எனப்படும், இயந்திரங்களை ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், ’அசெம்பிளிங்’ போன்ற, உதிரிபாகங்களை ஒன்றிணைப்பதில், மனிதர்களின் பங்களிப்பு, குறைந்து வருகிறது. இந்நிலையில், அதிக திறன் தேவைப்படாத தொழில்களும், வேகமாக இயந்திரமயமாகி வருவதாக, எச்.எப்.எஸ்., ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விவரம்: வரும், 2021ல், ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., எனப்படும் பணிகளை பிறரிடம் ஒப்படைத்து பெற்றுக் கொள்ளும் தொழிலில், இயந்திரங்களின் பங்கு அதிகரிக்கும். இதனால், ஐ.டி., துறையில், அடிப்படை கல்வியறிவுடன், அதிக திறன் தேவையற்ற பிரிவுகளில், 6.40 லட்சம் பேர் வேலை இழப்பர். சர்வதேச அளவில், ஐ.டி., துறை வேலைவாய்ப்பு, 9 சதவீதம் குறையும். 14 லட்சம் பேரின் பணி பறிபோகும்.
இதில், அமெரிக்கா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் விதிவிலக்கல்ல. ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறைகளில், 37 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில், பி.பி.ஓ., மற்றும் அடிப்படை கட்டமைப்பு பிரிவுதான் அதிகம் பாதிக்கப்படும். குறைவான திறன் தேவைப்படும் பணிகளில், 30 சதவீதத்தை, இயந்திரங்கள் எடுத்துக் கொள்ளும்.
ஒரே வகையான செயல்பாடுகளை, திரும்பத் திரும்ப செய்யும் பணிகள்; அதிக கல்வியறிவு தேவைப்படாத வேலைகள் ஆகியவை, இப்பிரிவில் அடங்கும். இதில், ’ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ எனப்படும், செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் இயந்திரங்கள் தான், வேலையை பறிக்கக் கூடியவையாக இருக்கும். இது, ’கால்சென்டர்’ போன்ற, அழைப்பு மையப் பணிகளில், தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேசமயம், இதேகாலத்தில், நடுத்தரமான ஆற்றல் தேவைப்படும் பணிகளில், வேலைவாய்ப்பு, 8 சதவீதம் அதிகரிக்கும். இப்பணிகளில், சவால்களுக்கு தீர்வு காண்பதில், மனிதர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும். அதிக திறன் தேவைப்படும் பணிகளில், வேலைவாய்ப்பு, 56 சதவீதம் உயரும். இதில், கருத்துருவாக்கம், பிரச்னைக்கு தீர்வு காண்பது, ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, இயந்திரங்களை விட, மனித மூளை மிகவும் அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
’இப்போதே கூற முடியாது’
மனிதர்கள் செய்யும் தொழில்கள், இயந்திரமயமாவதும், ’ரோபோ’ எனப்படும், இயந்திர மனிதர்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவர் என்பதையும், தற்போதைய சூழலில் கணிப்பது கடினம். தொழில்கள் இயந்திரமயமாவதால், ஓரளவிற்கே பாதிப்பு இருக்கும். அதேசமயம், புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம், பயன்பாடு போன்றவற்றால், அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு பெருகும். -சங்கீதா குப்தா, மூத்த துணை தலைவர், ’நாஸ்காம்’
No comments:
Post a Comment