''இன்ஜி., துறையில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புக்கு, மாணவர்கள் படிக்கும் போதே தயாராக வேண்டும்,'' என, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சேர்மன் ஸ்ரீராம் தெரிவித்தார்.
'தினமலர்' நாளிதழுடன், 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' நிறுவனம் இணைந்து நடத்திய, 'உங்களால் முடியும்' நிகழ்ச்சியில், ஸ்ரீராம் பேசியதாவது:பெரம்பூரில், முதன்முறையாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், இன்ஜி., பாடப்பிரிவை மட்டும் பார்க்காமல், எந்த கல்லுாரியில் தொழிற்துறையுடன் சேர்ந்து கற்பிக்கப்படுகிறது; வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.
இன்ஜி., முடிக்கும் மாணவர்களில், 18 சதவீதம் பேர் மட்டுமே இன்ஜி., துறை வேலைக்கு தகுதியானவர்களாக இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. எந்த கல்லுாரி பாடத்திட்டத்தை தாண்டி கற்றுத் தருகிறதோ, செயல்முறை பயிற்சி தருகிறதோ அந்த கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள். இன்ஜி., துறையில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதற்கு தகுதியானவர்களாக படிக்கும் போதே மாணவர்கள் தயாராக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியை, பூந்தமல்லி ஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் இணைந்து வழங்கியது. நிகழ்ச்சிக்கு வந்த மாணவ, மாணவியருக்கும், இன்ஜி., 'கட் - ஆப்' குறித்த விவரங்கள் அடங்கிய,
'தினமலர் - உங்களால் முடியும்' புத்தகம் வழங்கப்பட்டது.
சிறந்த கேள்விக்கு பரிசு:கவுன்சிலிங் மற்றும் இன்ஜி., படிப்பு தொடர்பாக
சந்தேகங்களுக்கு, கல்வியாளர்கள் நேரடியாக விளக்கம் அளித்தனர். இதில் சிறந்த கேள்விகளை கேட்டவர்களில், ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசு
வழங்கப்பட்டது. பிரேம்கர் என்ற மாணவர், வாட்ச் பரிசாக பெற்றார். சுபலட்சுமி, சரண்யா, ராகுல், ஈவான் மற்றும் உசேன் ஆகியோர், தலா ஒரு, 'பென் டிரைவ்' பரிசாக பெற்றனர்.
No comments:
Post a Comment