தமிழகத்தில், அனுமதியின்றி செயல்பட்ட, 56 நர்சிங் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. போலி பள்ளிகள், கல்லுாரிகள் மீதான நடவடிக்கை தொடர்கிறது. 'பாரத் சேவக் சமாஜ்' அறிவிப்பு பற்றி கவலை இல்லை' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 1,800க்கும் மேற்பட்ட போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள், கல்லுாரிகள் செயல்பட்டு வருவது அம்பலமானது. 'பாரத் சேவக் சமாஜ் என்ற, மத்திய அரசு அமைப்பின் அங்கீகாரம் பெற்றதாகக் கூறி, நடத்தப்படும் நர்சிங் படிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை; இத்தகைய மையங்களை, 10 நாட்களில் இழுத்து மூட வேண்டும்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது. இந்நிலையில், 'எங்கள் அமைப்பின் மீது களங்கம் ஏற்படுத்தும் நர்சிங் கவுன்சில் மீது, அவதுாறு வழக்கு தொடரப்படும்' என, பாரத் சேவக் சமாஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் ஆனிகிரேஷ் கலைமதி கூறியதாவது: போலி நர்சிங் பயிற்சி பள்ளி, கல்லுாரிகள் மீது, நர்சிங் கவுன்சில் பரிந்துரையின்பேரில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தூத்துக்குடி, கடலூர், தேனி, தர்மபுரி, காஞ்சிபுரம், திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த, 56 போலி நர்சிங் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன; இந்த நடவடிக்கைள் தொடரும். பாரத் சேவக் சமாஜ் அனுமதி பெற்றதாகக் கூறி நடத்தப்படும் படிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை. கர்நாடக மாநிலத்தில், ஏற்கனவே இத்தகைய படிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும், இந்த மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. பாரத் சேவக் சமாஜ் கடிதம் எதுவும், கவுன்சிலுக்கு வரவில்லை. நர்சிங் கவுன்சில் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; எதையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். பள்ளி, கல்லுாரிகளில் நடத்தப்படும் பாடப்பிரிவுகள் அங்கீகரிக்கப்பட்டதா என, தெரிந்து சேரவும். இது பற்றிய விவரங்களை, www.tamilnadunursingcouncil.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்; போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment