பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதால், கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 18 ஆயிரம் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதன்மூலம், நிகழாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு மூலம் இந்தக் கூடுதல் இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
அரசுக் கல்லூரிகளைப் பொருத்தவரை, அவற்றில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பி.இ. இடங்களும் கலந்தாய்வு மூலமே நடத்தப்படும். அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை, சிறுபான்மையினர் கல்வி நிறுவனமாக இருந்தால் 50 சதவீத இடங்களை ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு ஒப்படைக்க வேண்டும் (அதாவது அரசிடம் ஒப்படைக்க வேண்டும்). சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனமாக இருந்தால் 65 சதவீத இடங்களை கலந்தாய்வுக்கு ஒப்படைக்க வேண்டும்.
இவை போக, மீதமுள்ள பி.இ. இடங்களில் மட்டுமே அந்தந்தக் கல்லூரி நிர்வாகங்கள் தங்களது விருப்பம் போல மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள முடியும்.
18 ஆயிரம் இடங்கள் ஒப்படைப்பு: இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் 2011-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாகக் குறைந்து வருவதால், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பத் திணறி வருகின்றன. இவ்வாறு திணறும் கல்லூரிகள் தங்களுடைய நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும், அண்ணா பல்கலைக்கழக ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு மூலமான சேர்க்கைக்காக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்து வருவது வாடிக்கையாகிவிட்டது. 2011-ஆம் ஆண்டு முதல் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பி.இ. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்தன. 2015-இல் 20 ஆயிரம் இடங்களை இந்தக் கல்லூரிகள் ஒப்படைத்தன.
அதுபோல, நிகழாண்டில் (2016-17) பொறியியல் கலந்தாய்வு வருகிற 24-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் 18,614 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளன.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிகழாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை ஒப்படைக்க 17-5-2016 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 200-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் 18,614 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளன.
மேலும் 17 பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை ஒப்படைக்க அனுமதி கோரியிருக்கின்றன. நிர்வாக ஒதுக்கீட்டு பி.இ. இடங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்ட வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
குறைந்தன கல்லூரிகள்
பொறியியல் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதால், இழுத்து மூடப்படும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனால், மொத்தக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.
2015-16ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்தம் 533 பொறியியல் கல்லூரிகள் (அண்ணா பல்கலைக்கழக 3 துறைகளைச் சேர்க்காமல்) இருந்தன.
ஆனால், நிகழாண்டில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) 3 கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதுமட்டுமன்றி, அண்ணா பல்கலைக்கழகமும் 2 பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்த்து வழங்க மறுப்புத் தெரிவித்துவிட்டது.
மேலும், கல்லூரியை மூடுவதற்கு கடந்த ஆண்டே ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற்ற கல்லூரிகள் நிகழாண்டில் சேர்க்கை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன.
இதுபோன்ற காரணங்களால், கடந்த ஆண்டு 533-ஆக இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 2016-17ஆம் கல்வியாண்டில் 525-ஆகக் குறைந்துள்ளன.
பி.இ. இடங்கள் எவ்வளவு?
தமிழகத்தில் 2016-17 கல்வியாண்டில் 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 மத்திய அரசு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், 3 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், 492 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், 17 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 525 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.
இவை தவிர, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி என மூன்று துறைகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் அரசு பொறியியல் கல்லூரிகள், மத்திய அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 6,168 பி.இ. இடங்கள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 1,58,774 பி.இ. இடங்கள், 17 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 5,490 இடங்கள், 3 பல்கலைக்கழகத் துறைகளில் 2,177 பி.இ. இடங்கள் என மொத்தம் 1,72,609 அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்கள் உள்ளன.
இவற்றுடன் இதுவரை 18,614 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் அரசிடம் ஒப்படைத்திருப்பதால், 2016-17 பொறியியல் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வில் 1,91,223 பி.இ. இடங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டவும் வாய்ப்புள்ளது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment