தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, விருதுநகரில் மத்திய அரசு அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்ட விதிமுறைகளின் படி, தனியார், சுயநிதி பள்ளிகளில் அறிமுக வகுப்பில் 25 சதவீதம் நலிவுற்ற மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு அறிவித்தது.
அதற்கு ஆகும் செலவை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்திடம் அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, இந்த ஆணையில் உள்ள அட்டவணையின் படி சேர்க்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் திருச்சி, விழுப்புரம், திருவாரூர், காஞ்சிபுரம், விருதுநகர் என ஐந்து மாவட்டங்களில் உள்ள தனியார், சுயநிதி பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என மத்திய அரசு அலுவலர்கள் குழு ஆய்வு செய்கிறது.
இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் தனியார், சுயநிதி பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அலுவலர் குழு விருதுநகர் வந்துள்ளது. நேற்று (ஜூன் 22) முதல் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் இந்த குழு, தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு குறித்த ஆவணங்களை பார்வையிட்டது. பள்ளி தலைமையாசிரியர்களை அழைத்து இடஒதுக்கீடு குறித்து கேட்டறிந்தனர்.
No comments:
Post a Comment