Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 27, 2016

    மேல்நிலை வகுப்பில் 10 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத் திட்டங்கள்

    பத்து ஆண்டுகள் ஆகியும் மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் மாற்றப்படவில்லை. கால மாற்றத்துக்கு ஏற்ப பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வராதது, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணங்களால் ஐஐடி நுழைவுத் தேர்வு, பொறியியல், மருத்துவச் சேர்க்கைகளில் தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளதாகவும், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்கள் முன்னிலை பெறுவதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    நாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் உலக தரத்துக்கு இணையாக தரமான தொழில்நுட்பக் கல்வியை ஐஐடி, ஐஐஎஸ்சி, என்ஐடி ஆகியன வழங்குகின்றன. இவற்ரில், ஐஐடிக்களில் சென்னை ஐஐடியும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் திருச்சி என்ஐடியும் முன்னிலை பெற்றுள்ளன.

    ஜே.இ.இ. தகுதித் தேர்வில் குறைந்த அளவே தேர்ச்சி: இவற்றில் படிக்கச் செல்லும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைவாக இருக்கிறது. குறிப்பாக, மாநில கல்வி வாரியத்தின் கீழ் பிளஸ் 2 முடித்து வெளிவரும் 3 லட்சம் பேரில் நூற்றுக்கும் குறைவானவர்களே ஐஐடியில் சேர்க்கை பெறுவதற்கான ஜே.இ.இ. முதன்மைத் (அட்வானஸ்டு) தேர்வில் தகுதி பெறுகின்றனர். இதிலும், மிகக் குறைந்த பேருக்கே சென்னை ஐஐடியில் இடம் கிடைக்கும். மற்றவர்களுக்கு பிற மாநிலத்திலுள்ள ஐஐடிக்களில்தான் இடம் கிடைக்கும்.

    தரவரிசைப் பட்டியலிலும் முன்னிலை பெற்ற ஆந்திர மாணவர்கள் நிகழாண்டு எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலிலும் பிற மாநில மாணவர்களே முன்னிலை பெற்றுள்ளனர். தமிழக மாணவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பள்ளியில் படித்த எம்.வி. ஆதித்யா மகேஷ் என்ற மாணவிதான் முதலிடம் பிடித்தார்.

    அதுபோல பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில், முதல் 10 இடங்களைப் படித்தவர்களில் 6 பேர் பிற மாநிலங்களில் படித்தவர்கள். முதலிடம் பிடித்த அபூர்வா கேளத்திலும், 3-ஆம் இடம் பிடித்த பரதன், 4-ஆம் இடம் பிடித்த ரக்ஷனா, 5-ஆம் இடம் பிடித்த ஷிவராம் கிருத்விக், 6-ஆம் இடம் பிடித்த ஹர்ஷிதா, 7-ஆம் இடம் பிடித்த ஷேக் அப்துல் சமீர் ஆகிய 5 பேரும் 10-ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்துவிட்டு மேல்நிலைக் கல்வியை ஆந்திரம், தெலங்கானா பள்ளிகளில் அந்தந்த மாநில கல்வி வாரியத்தின் கீழ் படித்தவர்கள்.

    இதுபோல தமிழை ஒரு பாடமாகப் படிக்காமல், பிற மாநில கல்வி வாரியங்களின் கீழ் குறைந்த எண்ணிக்கையிலான பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தமிழக உயர்கல்வி நிறுவனங்களில் இடங்களைத் தேர்வு செய்த பிறகுதான், தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது, ஆந்திர மாணவர்களைவிட தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்பதே கல்வியாளர்களின் கவலையாக உள்ளது.

    "நீட்' கட்டாயமானால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு?
    "நீட்' போன்ற பொது நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக்கப்படும்போது, இந்த நிலை மேலும் மோசமடையும். தமிழக மருத்துவ இடங்களில் ஆந்திரம், கேரள மாணவர்களுக்குத்தான் இடம் கிடைக்கும். தமிழக மாணவர்களோ ஐஐடி சேர்க்கையில் உள்ளதுபோல, நூற்றுக்கும் குறைவானர்களே எம்.பி.பி.எஸ். சேரக்கூடிய நிலை உருவாகும்.

    ஏனெனில், "நீட்' பொதுத் தேர்வு பாடத் திட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 30 சதவீதத்துக்கும் அதிகமான பாடங்கள் தமிழக பிளஸ்-2 பாடத் திட்டத்தின் கீழ் வரும் வேதியியல், கணிதப் பாடங்களில் இடம்பெறவில்லை.

    பாடத் திட்டங்களில் மாற்றம் தேவை!
    கால மாற்றத்துக்கு ஏற்ப பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வராதது, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணங்களால் ஐஐடி நுழைவுத் தேர்வு, பொறியியல், மருத்துவச் சேர்க்கைகளில் தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளனர் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் சேர்க்கைகளில் தமிழக மாணவர்கள் முன்னுரிமை பெறும் வகையில், என்.சி.இஆர்.டி. பாடத் திட்டத்தின் அடிப்படையில் பள்ளி பாடத் திட்டத்திலும், தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    பாடத் திட்டம் மாற்றப்படாதது ஏன்?
    மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவராதது ஏன் என கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-
    தேசிய கல்வித் திட்டம் 2005-இன் கீழ் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்தது. அதுபோல, பிளஸ்-1, பிளஸ்-2 பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்காக, 3 ஆண்டுகளுக்கு முன்னர் வரைவு பாடத் திட்டத்தை உருவாக்கி இணையதளத்தில் வெளியிட்டு, கருத்துகளையும், பரிந்துரைகளையும் தமிழக அரசு கேட்டது.
    இதன்படி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு அரசும் ஒப்புதலும் அளித்தது. ஆனால், அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசிய கல்வி வாரிய பாடத் திட்டத்துக்கும், தமிழக கல்வி வாரிய பாடத்திட்டத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக பிளஸ்-1, பிளஸ்-2 பாடத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவே இல்லை. இதனால் 10 ஆண்டுகளாக பழைய பாடத் திட்டமே நடைமுறையில் உள்ளது.

    இது தமிழக மாணவர்களை பெரிய அளவில் பாதிக்கும். எனவே, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும், என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்துக்கு ஏற்பவும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிளஸ்-1, பிளஸ்-2 பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றார்.

    "கற்பிக்கும் முறையிலும் மாற்றம் தேவை'
    பாடத் திட்டத்தில் மட்டுமன்றி, கற்பிக்கும் முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கிறார் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-
    அரசு, தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 பாடங்கள் நடத்தப்படுவதே இல்லை. அனைவரையும் தேர்ச்சி கொடுத்து, பிளஸ்-2 வகுப்புக்கு அனுப்பிவிடுகின்றனர். உயர்கல்வி படிப்புகளுக்கும் அடித்தளமாக, அறிவை வளர்க்கும் 60 சதவீத விவரங்கள் இருப்பது பிளஸ் 1 பாடத் திட்டத்தில்தான். இருப்பினும், பிளஸ் 1 பாடங்களை எந்தவொரு பள்ளியும் நடத்துவதே இல்லை. நேரடியாக பிளஸ் 2 பாடங்களுக்குச் சென்று விடுகின்றனர். அவற்றை புரிதல் இன்றி. மனப்பாட முறையில் படிக்கும் மாணவர்கள், மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த பிறகு எதுவுமே புரியாமல் திணறுகின்றனர்.

    எனவே, பாடங்களை கற்பிக்கும் முறையிலும், தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும். பிளஸ் 1 தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மேலும், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ளதுபோல், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துகிற வகையில் பள்ளி பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றார்.

    No comments: