வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதிகளில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் பள்ளி மாணவர்கள் வருகிற ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவு, தங்குமிடம் அளிக்கப்படும். பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதுடன், இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருத்தல் வேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது.
தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொருத்தவரை விடுதிக் காப்பாளரிடம் வருகிற ஜூன் 30-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரியைப் பொருத்தமட்டில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஜாதி, பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் சான்றுகளை சமர்ப்பித்தால் போதுமானது.
ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 comment:
trbeap
Post a Comment