தமிழக அரசு 1.7.2012 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியும், தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இதற்காக அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் ஒவ்வொரு மாதமும் 150 ரூபாய் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும்தான் சிகிச்சை பெற முடியும். தமிழ்நாடு முழுவதும் சுமார் 657 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் சுமார் 12 லட்சம் ஊழியர்கள் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ 4 லட்சம் மதிப்பிலான சிகிச்சையை ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் பெறலாம். இத்திட்;டம் 30.6.2016 உடன் நிறைவடைவதால் 1.7.2016 முதல் நீடிக்கப்பட இருக்கும் புதிய காப்பீட்டுத்திட்டத்தை அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்துவதுடன், இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், சிவகங்கை மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரசேன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக தமிழக
அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது
புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 30.6.2016 உடன் முடிவடைய உள்ளது. புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 1.7.2016 முதல் 4 ஆண்டுகளுக்கு நீடிக்க உள்ளது. 2007ல் 2 லட்சமாக இருந்த சிகிச்சைத் தொகை ஏப்ரல் 2012ல் 4 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஜூலை 2016ல் விரிவு படுத்த இருக்கும் திட்டத்தில் ரூபாய் 7.5 லட்சம் வரை நாண்கு ஆண்டுகளுக்குள் சிகிச்சை பெற முடியும் என அரசு தற்பொழுது உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் தற்பொழுது மருத்துவமனைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிகிச்சைக்காக மாநகரங்களை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. ஊழியர்கள் காசில்லாமல் சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கில் அமுல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் சில மருத்துவமனைகள் முன் பணம் செலுத்தினால்தான் சிகிச்சையளிக்க முடியும் என நிர்பந்தம் செய்கின்றனர். பல நோய்களுக்கு இத்திட்டத்தில் சிகிச்சையளிக்க இயலாது எனவும் மறுக்கின்றனர். இதனால் பல ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேர்ந்தது.
எனவே புதிதாக விரிவுபடுத்த இருக்கும் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்காமல் பொது துறை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். காசில்லா சிகிச்சையை அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவு படுத்துவதுடன் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும். மாவட்டத் தொடர்பாளர்கள் சிகிச்சை பற்றிய முழு விபரங்களை ஊழியர்களிடம் தெளிவாக தெரிவிப்பதை உறுதி படுத்த வேண்டும். மேலும் ஊழியர்களிடம் தற்பொழுது பிடித்தம் செய்யும் தொகையை உயர்த்த கூடாது.
மேலும் சில அவசர சிகிச்சைகளுக்கு சிகிச்சை முடிந்த பின்னால் திரும்ப பணம் பெறும் வகையில் விதிகளில் தளர்வு செய்யப்பட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை அனைத்து ஊழியர்களுக்கும் முழுமையான உடல் பரிசோதனை செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும். தொடர் சிகிச்சை பெறும் நோய்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கவேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment