கல்லுாரிகளில் ராகிங்கை கட்டுப்படுத்த ராகிங் தடுப்புக் குழு அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், புகாருக்குள்ளாகும் மாணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனரகம் எச்சரித்துள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு தற்போது வகுப்புகள் துவங்கியுள்ளன. கல்வி நிறுவனங்களில், 'ராகிங்' கடும் குற்றமாக அறிவிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நிர்வாகத்துக்கு தெரியாமல் வகுப்பறைகள், வளாகம் மற்றும் வெளியிலும், 'ராகிங்' கொடுமைகள் நடந்துகொண்டுதான் உள்ளன.
'ராகிங்' கொடுமைக்கு ஆளா கும் மாணவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதுடன், சில நேரங்களில் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். இதனால், உருவாகும் முன்விரோதத்தால் கொலை உள்ளிட்ட பழிவாங்கும் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளன.
எனவே, ராகிங் தடுக்க கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், ராகிங்கை கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதுடன், ராகிங் தடுப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட, மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனரகம் கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர்(பொ) ஜெயலட்சுமி கூறியதாவது:
ராகிங் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்க கல்லுாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ராகிங் தடுப்புக் குழுவினரின் மொபைல் எண்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும். இக்குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகாருக்கு ஆளாகும் மாணவர் கல்லுாரியிலிருந்து நீக்கப்படுவதுடன் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார். முதல்வர் அலுவலகம் முன் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில், மாணவர்கள் ராகிங் குறித்து புகார் அளிக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கினால் எதிர்காலமே வீணாகிவிடும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.இவ்வாறு, ஜெயலட்சுமி கூறினார்.
யு.ஜி.சி., 'ஹெல்ப் லைன்'
யு.ஜி.சி., சார்பில், 24 மணி நேரமும் செயல்படும், 1800-180-5522 என்ற ராகிங் தடுப்பு, 'ஹெல்ப் லைன்' டில்லியில் செயல்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த சேவை உள்ளது. இந்த இலவச 'டோல்' எண்ணில் மாணவர்கள் ராகிங் குறித்து புகார் அளிக்கலாம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுவதுடன், தொடர்புடைய கல்லுாரி, பல்கலை துணைவேந்தர், போலீஸ் ஸ்டேஷன் உயர் அதிகாரி, எஸ்.பி., ஆகியோருக்கு மாணவனின் புகார் அனுப்பப்படுகிறது. எனவே, மாணவர்கள் இந்த எண்ணிலும் தொடர்கொள்ளலாம்.
No comments:
Post a Comment