''நமது வகுப்பறைகள் அனைத்தும், புள்ளிவிவர வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன. தேர்ச்சி விகிதம் எவ்வளவு, எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, ஸ்டேட் ரேங்க் எத்தனை பேர், கடந்த வருடத்தைவிட எத்தனை சதவிகிதம் அதிகத் தேர்ச்சி... என எண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரப் பட்டியலில் முந்திச் செல்லும் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுகின்றனர். ஒரு வகுப்பறை என்பது, புள்ளிவிவரங்களின் தொகுப்பு அல்ல; அது ஒரு தலைமுறை தன் சிந்தனையை உருவாக்கிக்கொள்ளும் உயரிய இடம். அதற்கு மனிதம் சார்ந்த வகுப்பறைகளே தேவை. அப்படி ஒரு வகுப்பறை இருந்தால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும்போது இத்தனை வெற்றுக்கூச்சல்கள் கேட்காது.
உலகின் எந்த நாட்டிலும் பள்ளித் தேர்வு முடிவுகளின்போது இத்தனை ஆரவாரக் கூச்சல்கள் ஒலிக்காது. மாணவர்கள், இந்தப் புள்ளிவிவர வகுப்பறையை அடியோடு வெறுக்கின்றனர். அதனால்தான் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து வீசுகிறார்கள். அந்த மனப்பான்மையே, அதன் பிறகு அவர்களிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தையே அடியோடு ஒழிக்கிறது. ஆண்டு முழுவதும் தன் மகிழ்ச்சியை, சுதந்திரத்தை, குழந்தைத்தன்மையைக் காவு வாங்கிய புத்தகத்தை அவமதிக்கும் அந்தக் கணம், அவன் பழிவாங்கியவனைப்போல் உணர்கிறான். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு நமது பாடத்திட்டத்தை, வகுப்பறைச் சூழலை மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில், யாரோ 10 மாணவர்கள் ரேங்க் வாங்கியது கொண்டாடப்படும் சத்தத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் மன அழுத்தம் கண்டுகொள்ளாமல் விடப்படும்!''
- ச. மாடசாமி
No comments:
Post a Comment